“இன்பம் பெருகுந் திருத்தொண்டுக் கிடையூ றாக விவர்மொழிந்தார்; அன்பு நிலைமை வழுவாமை யரசு புரக்கு மருளுண்டேல் என்பு மரவு மணிந்தாரை யிடைபெற் றறிவே” னெனப்புக்கு முன்பு தொழுது விண்ணப்பஞ் செய்தார்; முதல்வ ரருளினால், | 13 | (இ-ள்) இன்பம்...மொழிந்தார் - இன்பம் மேன்மேலும் பெருகுதற் கேதுவாகிய திருத்தொண்டிலே நான் முயலுதற்கு இடையூறாக இவ்வமைச்சர்கள் கூறினார்கள்; அன்பு நிலைமை....அறிவேன் என - சிவன் அன்பின் நிலையினின்றும் வழுவாமலே அரசு புரிவதற்குத் திருவருள் கிடைக்குமாயின், எலும்பும் பாம்பும் புனைந்த இறைவரைக் காலம் பார்த்து அவரது திருவுள்ளத்தை அறிவேன் என்று; புக்கு...செய்தார் - திருக்கோயிலினுள்ளே புகுந்து திருமுன்பு வணங்கி விண்ணப்பித்தனர்; முதல்வர் அருளினால் - இறைவரது திருவருளினாலே, (வி-ரை) இன்பம்...மொழிந்தார் - இது நாயனாரது திருவுள்ளக்கிடை பிறவியாலே அரச உரிமை பெற்றிருந்தும் நாயனார் அவ்வுரிமைகளையும் போகங்களையும் விரும்பாமல் இளமையிற்றானே, கொடுங்கோளூரில் உள்ள அரண்மனையிற் றங்காது, திருவஞ்சைக்களத்திற் றங்கிச் சிவன் றிருப்பணிகள் செய்து வந்தனர். (3754 - 3756); இப்போது அரசப் பட்டம் தம்மேலதாகக் கிடைக்கப் பெற்ற போதும் அவர் திருவுள்ளம் அவ்வாறே நிலைத்து நின்றது. அரசு முதலாகிய உலக போகங்களை யெல்லாம் வெறுத்து இறைவர் கழலே பரவுவதும் அடியார்களைப் பேணுவதுமே குறிக்கோளாகக் கொண்டு; வாழ்ந்து ஒழுகுவது சிவனடியார்களின் தன்மை. “போகம் வேண்டி வேண்டி லேன்புரந்த ராதி யின்பமும்” (திருவா); “இந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும், வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கி” (11-ம் திருமுறை - திருவிடை - மும் - கோ - 7); “கூடு மன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” (143) என்பன முதலிய எண்ணிறந்த திருவாக்குக்கள் காண்க, இக் கருத்தே பற்றி நம்பியாண்டார் நம்பிகள் இந் நாயனாரை “வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட, சூரன்” (திருத் - திருவந்தாதி - 45) என்று துதித் தருளினர். “அன்பு நிலைமை....அறிவேன்” எனப்புக்கு - விண்ணப்பஞ் செய்தார் - நாயனாரது திருவுள்ளக்கிடை அவ்வாறாயின், மந்திரிகள் கூறியதற்கு உடனே மறுத்து விடாது, இறைவர்பாற் சென்று அருளை அறிய விண்ணப்பஞ் செய்த தென்னையோ? எனின், அற்றன்று; இதுவரை நல்லறிவு தந்து சிவன் பணியிற் செலுத்தியதும், இனியும் அவ்வாறே மறவாது செலுத்த நிற்பதும் திருவருளேயாம் என்பதனை யுணர்ந்து ஒழுகினார். ஆனால் அப்போது அற்றை நாளில், தம்மை அரச மரபில் வரச்செய்தும், செய்தி முறைமையால் அரசதாயம் தம்மேலதாக வரும் நிலையிற் காட்டியும், அதனால் உலகியலில் அக் கடமைகளைத் தம்மேற் சேர்த்தியும் நிகழ்வித்ததும் திருவருளேயாம் என்பதனையும் உணர்ந்தார். அக் கடமைகளை மறுத்தலும் கூடாதென்றும் உளங் கொண்டனர். “கடனிதென் றுணர்ந்தும்” என்று இராமன் வரலாறு கூறும் கம்பன் பாட்டும் ஈண்டுக் கருதத் தக்கது. தாம் எண்ணியவாறு “என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்று (தேவா - அரசு) அதனையே மேற்கொள்வதா? அன்றி அருள் வழியே இப்போது வந்த அரசினையும் அதற்கு மாறின்றி ஏற்று உலகியற் கடமைகளையும் அந்த அருள் வழியே மேற்கொள்வதா? எது செய்யத் தக்கது? என்று ஐயங்கொண்டனர். திருத் தொண்டுக்கு இடையூறாக அரசு இருக்கும் - ஆதலின் அதனை ஏற்க அஞ்சினர்; சாதி - ஆயு - போகம் என்பன முன்னைவினைக் கீடாக வருவன வாதலின் அக் கடமைகளை மறுத்தலும் திருவருட்கு மாறாகும் ஆதலின் அருள் வழியே வந்த அரசினை மறுக்கவும் அஞ்சினர். அன்பு நிலையினின்றும் வழுவாது அரசு செய்யும்படி திருவருள் ஆனை பிறக்குமாகில் அதனை இறைவரிடம் விண்ணப்பித்து அறிவேன் என்றெழுந்தனர் என்பதாம். “வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ...வேண்டி நீயா தருள்செய்தாய் யானு மதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு நின்றன் விருப்பன்றே” என்ற திருவாசகம் ஈண்டுச் சிந்திக்கற்பாலது. ஆளுடைய பிள்ளையார் திருவாலவாயில் சமணர் வாதத்துக்குச் சென்றருளு முன்பு, இறைவரது திருவுள்ளமறிய விண்ணப்பித்த வரலாறும் கருதுக. “பொன்னர் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும், என்னாவி காப்பதற் கிச்சை யுண்டேல்” (தேவா - அரசு) என்பது முதலிய திருவாக்குக்களும் கருதுக. ஈண்டு, இனி, அரசு புரக்கும் கடமையிற் றிருவருள் தம்மைச் செலுத்தினாலும், அஃது, “அன்பு நிலைமை வழுவாமை”யிருக்க வேண்டும் என்பதே நாயனாரது திருவுள்ளமாகும் என்பதனையும் கருதுக. விடைபெற்று - இறைவரிடம் விண்ணப்பிப்பதற்கும் உரிய நேரங்களும் இடையும் உண்டென்பது சிவாகம விதியாம். சிவபூசை நியமங்களும் சிவாலய தரிசன விதிகளும் காண்க. "மேய கால மலாமையின்" (17) என்பன முதலியவைகாண்க. இன்பம் பெருகும் திருத்தொண்டு என்றதனால் அரசாட்சியின் பண்பு அத்தன்மைத் தன்று என்பது குறிப்பு. இன்பம் - சிவனருளிற் றிளைத்தலால் வருவது. இஃது அன்பினால் உளதாவதாம் என்பார் மேல் அன்பு - வழாமை என்றார். “அன்பினா லின்ப மார்வார்” (342) என்று திருத்தொண்டர் தன்மையை இறைவர் அறிவித்தமை காண்க. “இறவாத வின்ப அன்பு” (1776); “இன்பமே யென்னுடை யன்பே” (திருவா). ஐயடிகள் காடவர் கோனாயனார் “பாரளிப்பா ரரசாட்சி, யின்னலெனவிகழ்ந்ததனை யெழிற்குமரன்மேலிழிச்சி, நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்” (4048) என்ற சரித வரலாறும் இங்கு நினைவு கூர்க. “முடியரசா, மத்திற்கு மும்மை நன்றாலரற் காயைய மேற்றம்” (க்ஷேத்-வெ). |
|
|