பாடல் எண் :3761

மேவு முரிமை யரசளித்தே விரும்பு காதல் வழிபாடும்,
யாவும் யாருங் கழறினவு மறியு முணர்வு,மீறில்லாத்
தாவில் விறலுந், தண்டாத கொடையும், படைவா கனமுதலாம்
காவன் மன்னர்க் குரியனவு மெல்லாங் கைவந் துறப்பெற்றார்.
14
(இ-ள்) மேவும்...வழிபாடும் - பொருந்திய உரிமையுடைய அரசாட்சியினை அளித்தவாறே தாம் விரும்பிய காதல் விளையும் இறைவரது வழிபாடும், யாவும்....உணர்வும் - அஃறிணை உயர்திணை என்ற இருதிறத்துயிர்களும் சொல்வன வெல்லாவற்றையும் அறியும் உணர்வும்; ஈறில்லாத் தாவில் விறலும் - அளவில்லாத ஒப்பற்ற வெற்றியும்; தண்டாத கொடையும் - தடையில்லாத ஈகையும்; படைவாகனம்......உரியனவும் - படையும் ஊர்திகளும் முதலாக உலகங்காவல் புரியும் அரசர்க் குரித்தான அங்கங்களும்; எல்லாம்...பெற்றார் - ஆகிய இவை எல்லாம் தம்மைச் சேர்ந்து பொருந்தும்படி அருள் பெற்றனர்.
(வி-ரை) வழிபாடும், உணர்வும், விறலும், கொடையும், உரியனவும் (ஆகிய) எல்லாம் என்று கூட்டுக; உம்மைகள் எண்குறித்தன.
அரசளித்தே - வழிபாடு - “அன்பு நிலைமை வழுவாமை அரசுபுரக்கும் அருளி”னையே (3760) நாயனார் விரும்பி வேண்டினராதலின் அதனை முதலிற் கூறினார். பின்வருவன எல்லாம் அவ்வரசாட்சிக்குரிய அங்கங்களாய் வேண்டத் தக்கன; இவை அரண் அளித்தன. அரசளித்தே - அரசு புரிந்து கொண்டே; ஏகாரம் தேற்றம்.
யாவும்....உணர்வும் - அரசர்கள் தம் கீழ்வாழும் மக்களுக்கே யன்றி, மற்றெல்லாவுயிர்களையும் காக்கும் கடமைப்பாடுடையவர்கள்; அஃது அவ்வுயிர்கள் எல்லாம் சொல்லும் மொழிகளை அறியும் உணர்வு பெற்றிருந்தாலன்றி யியலாது; அதன் பொருட்டே இந்நாயனாருக்கு இறைவர் இவ்வாறருளினர் என்பது மேல் (3763 - 3787) உரைக்கப்படுதல் காண்க; அன்றியும், இந்நாயனார் சிவயோக நிலையினர்; சிவயோகங் கைவரப்பெற்றார்க்குப் புலப்படும் நாத ஒலியினுள் எல்லாவுயிர்களின் ஒலியும் அடங்கும் என்பர்; அரசர், மக்கள் முதலாகிய எல்லாவுயிர்களையும் காக்கும் கடப்பாடுடைமை பற்றி முன் திருநகரச் சிறப்பில் (121) உரைத்தவை பார்க்க; இவ்வுணர்ச்சியின் பயனாலே இந்நாயனார் தமது குதிரையின் செவியிலே சிவமந்திர மோதி, அதன் மீதில் ஏறித், திருக்கயிலை சென்று சேர்கின்றார் எனவரும் சரிதவரலாறும் காண்க. யாவும் - அஃறிணையும், யாரும் - உயர்திணையும் குறித்தன. விறல் - வெற்றி; வல்லமை; தாவில் - அழியாத; கெடாத; தண்டாத - நீங்காத; தடைபடாத; கொடை - “கார்கொண்ட கொடை” (திருத்தொண்டத் தொகை).
கைவருதல் - பொருந்துதல்; தம் வசமாகுதல்.
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வு பெற்ற இக் காரணத்தால் இந்நாயனாருக்கு கழறிற் றறிவார் என்ற பெயர் வழங்கலாயிற்று; இதனை “அளவில் பெருமை யகிலயோ னிகளுங் கழறிற் றறிந்தவற்றின், உளமன் னியமெய் யுறுதுயர மொன்று மொழியா வகையகற்றி” (3787) என்று அரசாட்சி புரிதலில் இதனைப் பயன்படுத்திய நிலையில் வைத்துக் கூறுவது காண்க.