ஆன வருள்கொண் டஞ்சலிசெய் திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல் ஊன மாகுந் திருத்தொண்டுக் கெனினு முடையா னருளாலே மேன்மை மகுடந் தாங்குதற்கு வேண்டு மமைச்சர்க் குடன்படலும் மான வமைச்சர் தாள்பணிந்தவ் வினைமேற்கொண்டு மகிழ்ந்தெழுந்தார். | 15 | (இ-ள்) ஆன.....புறம் போந்து - முன்கூறியவாறு பெறலாயின திருவருளினைக் கைக்கொண்டு கும்பிட்டு வணங்கித் திருக்கோயிலினின்றும் புறத்தே வந்து; அரசளித்தல்....எனினும் - அரசாட்சி செய்தல் திருத்தொண்டுக்கு இடையூறு செய்வதேயானாலும்; உடையான்...உடன்படலும் - இறைவரது திருவருள் பெற்றமையாலே மேன்மையாகிய அரசமுடியினைத் தாங்குதற்கு விண்ணப்பித்து நின்ற மந்திரிகளுக்குத்தம் உடன்பாட்டினை சொல்லுதலும்; மான...எழுந்தார் - பெருமையுடைய அவ்வமைச்சர்கள் நாயனாரது திருவடிகளில் வணங்கி அதற்கு வேண்டிய செயல்களை மேற்கொண்டு மகிழ்ச்சியோடும் சென்றார்கள். (வி-ரை) ஆன - முன் கூறியவாறு கைவந்துறப் பெறலான. அரசளித்தல்...எனினும் - அரசாட்சி திருத்தொண்டுக்கு இடையூறாகும் என்று (3760) தாம் வருந்தினாராயினும்; தெரிந்தாராயினும்; ஊனம் - இடையூறு. அருளாலே - அருள் காட்டிய வழி நிற்றலே கடன் என்றமையாலே; அருளாலே - தாங்குதற்கு - உடன் படலும் என்று கூட்டுக. எனினும் - அருளாலே - முன் (3760) கூறியபடி, அரசு புரிதலில் இவருக்கு விருப்ப மில்லாதிருந்தும், திருவருள் ஆணை செலுத்தியபடி அமைந்து நிற்றலே கடன் என்றதனால் இசைந்தனர் என்பது; வேண்டும் - விண்ணப்பித்த; மானம் - பெருமை. அவ்வினை - முடிசூட்டுதற்குரிய சடங்குகள்; மேல்வரும் பாட்டுப் பார்க்க. அரசளித்தால் - என்பதும் பாடம். |
|
|