பாடல் எண் :3763

உரிமை நாளி லோரைநல னெய்த மிக்க வுபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய்
திருமை யுலகுக் கொருமைமுடி கவித்தா ரெல்லா வுயிருமகிழ்
தரும நிலைமை யறிந்துபுவி தாங்குங் கழறிற் றறிவார்தாம்.
16
(இ-ள்) உரிமை...மங்கலஞ் செய்து - முடிசூட்டுதற் குரியதாய் விதித்த நாளில் ஓரையின் நலமும் பொருந்த, மிக்க உபகரணங்களை எல்லாம் சிறப்புடனமையும்படி வேண்டிய எல்லாப் பொருள்களும் விளங்க அமைத்து மங்கலச் சடங்குகள் செய்து; எல்லாவுயிரும் மகிழ்...தாம் - உயர்திணை அஃறிணை என்னும் பகுப்பில் அமைந்த எல்லா வுயிர்களும் மகிழ்தற் கேதுவாகிய அறநீதியின் தன்மை யறிந்து உலகு புரக்கும் கழறிற்றறிவார் தாம்; இருமை...கவித்தார் - இம்மை வீடு என்ற இரண்டு உலகுக்கும் பொருந்துவதாகிய ஒரே முடியினைச் சூடிக்கொண்டனர்.
(வி-ரை) உரிமை நாள் - அரசர் முடிசூடுதற்குரியதாகக் கணித நூல்களில் விதித்த நன்னாள்.
ஓரை - நல்வேளை; இலக்கினம், முகூர்த்தம் என்பர். நல்ல ஓரையில்.
உபகரணம் - முடிசூட்டும் சடங்கிற்கு வேண்டிய பொருள்கள்.
மங்கலம் செய்து - மங்கல வினைகளாகிய சடங்குகளை எல்லாம் செய்து.
இருமை உலகு - இவ்வுலக ஆட்சியும், இறை வழிபாட்டு நெறியில் வரும் வீட்டு நெறியாட்சியும்; “அன்பு நிலைமை வழுவாமை யரசு புரக்கும்” (3759); “உரிமை அரசளித்தே விரும்பு காதல் வழிபாடும்” (3761). இவ்வாறன்றி, இதற்கு, அஃறிணை உயர்திணை உலகு; சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சம் என்றிரண்டாகிய உலகு என்றுரைத்தார் முன் உரைகாரர்கள். அது பொருந்தாமை அறிக.
ஒருமை முடி- இவ்வுலக உரிமை அரசாட்சியுடனே அன்பு வழிபாடும் பொருந்த ஆளும் முடி. இருமை - ஒருமை. சொல்லணி.
எல்லா....தாங்கும் கழறிற்றறிவர் - கழறிற்றறிவார் என்ற பெயர்ப் பொருளையும் காரணத்தையும் விளக்குவார் உடம்பொடு புணர்த்தி ஓதினார்; யாவும்...உணர்வும் (3761) என்ற வரம் பெற்ற காரணம் காண்க.
எல்லா உயிரும் - உயர்திணை அஃறிணை என்ற பகுதிகளுள் அடங்கிய எல்லா உயிர்களும்; உம்மை முற்றும்மை; தருமநிலை - அறநூல் விதி; மகிழ் தருமம் - மகிழ்தற் கேதுவாகிய தருமம்.
கவித்தார் - சூட்டப் பெற்றார். செயப்பாட்டுவினை.