தம்பி ரானார் கோயில்வலங் கொண்டு திருமுன் றாழ்ந் தெழுந்து கும்ப யானை மேல்கொண்டு கொற்றக் குடையுஞ் சாமரையும் நம்பு முரிமை யவர்தாங்க, நலங்கொ ணகர்சூழ் வலங்கொள்வார் மொய்ம்பிலுவரின்பொதிசுமந்தோர்வண்ணான்முன்னேவரக்கண்டார். | 17 | (இ-ள்) தம்பிரானார்...எழுந்து - இறைவரது திருக்கோயிலினை வலங்கொண்டு திருமுன்பு நிலமுற வணங்கி எழுந்து; கும்ப யானை...தாங்க - மத்தகத்தினை உடைய யானையினை மேல்கொண்டு வெண்கொற்றக் குடையினையும் சாமரையினையும் நம்பும் உரிமையுடைய பரிசனங்கள் தாங்கி ஏற்றவாறு பணி செய்ய; நகர்...கொள்வார் - திருநகரத்தினைச் சுற்றி வலமாக வருகின்றாராகிய நாயனார்; மொய்ம்பில்...கண்டார் - தோள்கட்டில் உவர்மண் பொதியினைச் சுமந்துகொண்டு ஓர் வண்ணான் தம்முன்பு வருதலைக் கண்டனர். (வி-ரை) தம்பிரானார்...எழுந்து - முன்கூறிய முடி சூட்டுஞ் செய்தி திருவஞ்சைக் களத்தில் தங்கி நாயனார் எழுந்தருளியிருந்த அரண்மனையில் நிகழ்ந்தன என்பது கருதத்தக்கது. முடிசூடிய உடனே அங்கு நின்றும், திருக்கோயிலுக்கு எழுந்தருளி இறைவரை வழிபட்டு விடைகொண்டு புறப்பட்டனர் என்பது குறிப்பு; நாயனார் இளவரசராகத் திருவஞ்சைக்களத்தில் தங்கித் திருத்தொண்டு செய்திருந்தனர் என்பது முன் கூறப்பட்டது; அக்காலத்தில் அங்குத் தனியாகத் திருமடம் அமைத்து வாழ்ந்திருந்தனர். அந்த மனை இடம் திருக்கோயிலுக்குத் தெற்கில் சிறிது தூரத்தில் (1/2நாழிகை யளவில்) உள்ளது; அதனை கொச்சி அரசாங்கத்தின் ஆராய்ச்சியாளர் கண்டு, அதற்கு அடையாளமாக நினைவுத் தூண் ஒன்று நிறுவி, அதில் (The Site of the Palace of St Cheraman) “சேரமான் பெருமாள் நாயனாரது அரண்மனை யிருந்த இடம்Ó என்று எழுத்துப் பொறித்து வைத்திருக்கின்றார்கள். அதில் நான்கு சிவலிங்கங்களும் பதித்துள்ளார்கள்; இந்நாளிலும் கொச்சி மன்னர்கள் முடிசூடிக்கொண்டபின் முதலில் திருவஞ்சைக்களத்தில் வழிபாடு செய்து யானை தந்து சிறப்புச் செய்யும் வழக்கம் நிலவுகின்றது. கும்பயானை...நகர்சூழ வலங்கொள்வார் - யானை மீதில் அமர்ந்து அரசர் நகர்வலம் கொள்ளும் வழக்கம் இன்றும் கொச்சி திருவாங்கூர் முதலிய மலைநாட்டில் காண நிகழ்வதாம். யானைமேல் குடை சாமரைகள் இரட்டும் மரபு நிலையும் காணலாம். கும்பம் - மத்தகம். கும்பம் போன்றிருத்தலின் கும்பம் எனப்பட்டது; வடிவு காரணமாகப் போந்த பெயர். இதுபற்றிக் கும்பி என்றோர் பெயருமுண்டு. நம்பும் உரிமையவர் - இப்பணிக் கென்று வழி வழி வந்த உரிமையுடையவர்கள்; நம்பும் - அரசனது மெய்க்காவலுக்கு நம்பிக்கையுடைய அணுக்கமுடையவர்களே இப்பணியில் அமர்த்தப்படுவர். நகர் வலம் - முடி தாங்கிய அரசர் அக்கோலத்துடன் நகர் வலம் வருதல் வழக்கு; இது திருவஞ்சைக் களத்தினின்றும் அரசர் தலைநகராகிய கொடுங்கோளூருக்கு செல்லும் நகர்வலம். மொய்ம்பு - இங்குத் தோள்கட்டு என்ற பொருளில் வந்தது; மொய்ம்பு - வலிமை; சுமைதாங்கி நடத்தற்கு வலிமைகொண்ட உடற்பகுதி தோள்கட்டு. உவரின் பொதி - அறுவையில் ஏற்றி அழுக்குப் போக்கும் உவர் மண்ணின் சுமை (மூட்டை). உவரேற்றிய அறுவைச் (துணி) சுமை என்றலுமாம். வண்ணான் முன்னே வர - பொதியுடன் வண்ணான் எதிரில் வரக்காணுதல் (நன்னிமித்தம்) நற்சகுனங்களில் ஒன்றென்பர். |
|
|