மழையிற் கரைந்தங் குவரூறி மேனி வெளுத்த வடிவினால் “உழையிற் பொலிந்த திருக்கரத்தா ரடியார் வேட”மென்றுணர்ந்தே இழையிற் சிறந்த வோடைநுதல் யானைக் கழுத்தி னின்றிழிந்து விழைவிற் பெருகுங் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார். | 18 | (இ-ள்) மழையில்...வடிவினால் - மழையினாலே; உவர்மண் கரைந்து ஊறியதனால் மேனி வெளுத்து இருந்த வடிவத்தினாலே; உழையில்...உணர்ந்தே - மானுடன் விளங்கும் திருக்கரத்தினை உடைய இறைவரது அடியார் திருவேடம் இஃது என்னும் உணர்ச்சி பெற்றே; இழையில்.....இழிந்து - அணிகளிற் சிறந்த பட்டத்தினை அணிந்த யானையின் கழுத்தினின்றும் கீழே இறங்கி; விழைவில்....கைதொழுதார் - ஆசையினாற் பெருகிய பெருவிருப்பத்தினோடும் விரைவாக முன் சென்று கைகூப்பித் தொழுதனர். (வி-ரை) மழையினால்...வடிவினால் - மழையினால் உவர்மண் ஊறி வடிதலினால் மேனி வெண்மை நிறங்கொண்டு விளங்கிய காரணத்தால். மழைக் காலத்தில் ஒருநாளிற் பல முறையும் மழை பெய்து போதல் இன்றும் இந் நாட்டு நிகழ்ச்சி. உழையில்....வேடம் என்று உணர்ந்தே - உடலில் வெண்மை நிறம் காணப்பட்ட தன்மை சிவன் அடியார் திருவேடத்தினைக் காட்டிற்று; இஃது இவரது உணர்வின் பக்குவநிலை; அடியார் திருவேடமாவது திருநீற்றின் விளக்கத்தால் நிச்சயிக்கப்படும் என்பதாம்; “வெண்டிருநீற் றின்பொலிவு மேற்கண்டேன்; வேறினியென்?, அண்டர்பிரான் சீரடியா ராயினார்” (645) என்று கொண்ட ஏனாதி நாதனார் வரலாறும், மெய்யெலாம் நீறுபூசி வந்த வஞ்சகனையும் “நமர்” (482) என்று கொண்ட மெய்ப்பொருளார். வரலாறும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. வயிரவ அடியாரை ஊட்ட, உடன் உண்ண ஓரடியார் காணக்கிடையாத போது, நீறு சாத்தி யிடுவார்தமைக் கண்டே யானு மிடுவேன் (ஆதலின் என்னைச் சிவனடியாருள் ஒருவனாக ஏற்கத்தக்கது) (3736) என்ற குறிப்புடன் கூறிய சிறுத்தொண்ட நாயனார் சரிதமும் காண்க. ஈண்டுத் திருநீறின்றியும் வெண்மை நிறம் திருநீற்றினை நினைவூட்ட, அஃது அடியார் வேடத்தினைக் காட்ட உணர்ந்தனர் நாயனார்; திருநீற்றின் வெண்மையினைக் கண்டும் சுண்ணாம்பின் வெண்மையினை நினைவு கூறும் கயவரும் இந்நாளில் உளர்; அவ் வவதூற்றினைக் கேட்டும் வாளா ஊமர்போலிருக்கும் சைவர் என்போரும் உளர்; இவை இக்காலக் கொடுமை! “எவரேனுந் தாமாக விலாடத்திட்ட திருநீறும்” (தேவா - அரசு) என்ற திருவாக்கு இங்கு நினைவு கூர்தற்பாலது. யானைக் கழுத்தி னின்றிழிந்து காதலினால் - கைதொழுதார் - அடியார் திருவேடங் கண்டபோது காதலுடன் கைதொழுதல்உண்மை யன்பின் றன்மை. “வேடமும் அரனெனத் தொழுமே” (போதம் - 12); உழை - மான், உழையிற் பொலிந்த கரம் - மானேந்திய கை. இழையிற் சிறந்த ஓடை - இழை - பொன்னிழைகள்; இவற்றால் யானைப்பட்டத்தை அணி செய்வர். ஓடை - யானைப்பட்டம். கிம்புரி முதலாக யானைக்கிடும் அணிகள் பல; அவற்றுட் சிறந்தது ஓடை என்னும் முக படம். கழுத்தினின்றும் இழிந்து - யானையின் மேனின்றும் கீழ் இறங்குவோர் அதன் கழுத்திளின்றும் அதன் காது, துதிக்கை இவற்றின் உதவி கொண்டு கீழிறங்குதல் அவ்வினை அறிந்தோர் வழக்கு; ஊர்திகளின் இருந்தபடி வணங்கலாகாது என்பது விதியாதலின் இறங்கினார். விழைவு - ஆசை; காதல் - பெருவிப்பம். விழைவு - காதல் மிகுதியினால் வருவது. இங்கு நாயனார்தாம் அரசமுடி கவித்து நகர்வலம் வரும் உலகியற் சிறப்பினைச் சிறிதும் மனத்தில் வையாது, மறந்து, சிவவழிபாட்டிலே முனைந்தனர். இஃது “அன்பு நிலைமை வழுவாமை யரசுபுரக்கும் அருளைப்” பெற்று (3760), வேண்டியவாறே “அரசளித்தே விரும்பு காதல் வழிபாடு செய்யும் தன்மை” (3761)யில் நின்ற நிலையினை, ஒழுக்கத்தில் அறியக் காட்டியவாறு கண்டு கொள்க. |
|
|