சேரர் பெருமான் றொழக்கண்டு சிந்தை கலங்கி முன்வணங்கி “யாரென் றடியே னைக்கொண்ட; தடியே னடிவண் ணா” னென்னச் சேரர் பிரானு “மடிச்சேர னடியே” னென்று, “திருநீற்றின் வார வேட நினைப்பித்தீர்; வருந்தா தேகு” மெனமொழிந்தார். | 19 | (இ-ள்) சேரர் பெருமான்...வணங்கி - சேரர் பெருமான் முன் கூறியவாறு கைதொழக் கண்டு (அவ்வண்ணான்) மனங்கலங்கி முன்னே வணங்கி; யாரென்று...என்ன - தேவரீர் அடியேனை யாவர் என்று நினைந்துகொண்டு இவ்வாறு செய்தருளிற்று? அடியேன் தேவரீரது அடிப்பணியாளனாகிய வண்ணான்” என்று சொல்ல; சேரர் பிரானும்...என்று - சேரர் பெருமானாகிய நாயனாரும் அடியேன் அடிச்சேரன் என்று சொல்லி; திருநீற்றின்....என மொழிந்தார் - (நீர் உண்மையில் நீறு பூசிய அடியா ரல்லாவிடினும்) திருநீற்றின் பொலிவுடைய இனிய அன்புக் கிருப்பிடமாகிய திருவேடத்தினை அடியேனுக்கு நினைப்பூட்டினீர்; ஆதலின் வருந்தாது செல்வீராக என்று மொழிந்தருளினர். (வி-ரை) யாரென்று....என்ன - சேரனார் தன்னைத் தொழக்கண்ட அவ்வண்ணான் தன்னை வேறு யாவர் என்றோ தவறாக எண்ணியதனால் அரசர் இவ்வாறு செய்திருத்தல் வேண்டுமென்று துணிந்தவனாய் உண்மை புலப்படுத்த இவ்வாறு கூறினான். அவரது தவற்றினைக் கூறிய நயமும், தனது உண்மை நிலை கூறிய பணிவும் இவனது உயர்ந்த மனப் பான்மையையும் பண்பாட்டையும் குறித்தன. இஃது அந்நாட்டுத் தமிழர்களது உயர்ந்த உலகியல் நாகரிகத்தினைக் காட்டுவதாம். சேரர் பிரானும்....வருந்தாதேகும் என மொழிந்தார் - இஃது இந் நாயனாரது மிக உயர்ந்த அன்பினியல் மேம்பாடும், உலகியலில் உயர்ந்த நாகரிகமும், சமயோசிதமாக வரும் இன்மொழி நிலையும் ஒருங்கே குறித்தநயம் கண்டுகொள்க. அடிச்சேரன் அடியேன் - என்றது அவ் வண்ணான் “அடியேன் அடி வண்ணான்” என்றதற்கு மறுமொழியாக அமைதி கூறியது. “அடிச்சேரன் என்னும் சேரனார்” (1081) திருநீற்றின் - நினைப்பித்தீர் - “இஃது அடிச்சேரன் அடியேன்” என்று தாம் கூறியதற்கும், அவனைத் தொழுததற்கும் அமைதி கூறியது. வண்ணான் வேடம் உண்மையிற் திருநீற்றின் வாரவேடமல்லாவிடினும் அதனை நினைவுக்குக் கொண்டு வரும் குறியாகி நின்றமையால் அவ் வேடங் கண்டஅப் பயனையே தந்தது. ஆதலின் அந் நினைவுக்குறி வணங்கற் குரியதாயிற்று என்றபடி. வருந்தாது ஏகும் - இக் காரணத்தால் அரசர் முடிசூட்டி நகர் வலங் கொள்ளும் சிறப்பில் குறுக்கிட்டமைக்கும், இடையில் அதற்குப் பழுதாகிய நிகழ்ச்சிக்குக் காரணமாயினமைக்கும் வருந்தாது என்க?. இந்நாளில்இவ்வாறு வரும் அரசர் பவனியையும், சிறு அதிகாரிகள் வருகையினையும், வேறு மக்கள் குறுக்கிடா வண்ணம் நெடுநேரமும் நெடுந்தூரமும் காவல் புரியும் நிலையும், அறியாது குறுக்கிடுவாரையும் நீக்கி ஒறுக்கும் நிலையும் ஈண்டு வைத்து ஒப்புநோக்குக. தமிழ் அரசின் மேம்பாடும் கருதுக. |
|
|