பாடல் எண் :3767

மன்னர் பெருமான் றிருத்தொண்டு கண்டு மதிநீ டமைச்சரெலாஞ்
சென்னி மிசையஞ் சலிசெய்து போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில் புக்கார் புனைமங் கலம்பொலிய.
20
(இ-ள்) மன்னர் பெருமான்....போற்ற - அரசர் பெருமானுடைய திருத்தொண்டினைக் கண்டு மதிநீடிய அமைச்சர்களெல்லாரும் தலையின்மேலே கைகூப்பி அஞ்சலி செய்து துதிக்க; சினமால் களிறு ஏறி - சினமுடைய பெரிய யானையின் மேல் ஏறி; மின்னும்....வலங்கொண்டு - ஒளி வீசும் மணிகளினாலே அணியப்பட்ட கொடிகள் கட்டிய மாடங்கள் நிறைந்த வீதிகளையுடைய பழைய நகரத்தினை வலம் கொண்டு; புனைமங்கலம் பொலிய - புனையப்பட்ட மங்கலம் விளங்க; பொன்னின்...புக்கார் பொன் பூண்ட மணிகளை யுடைய திருமாளிகையின் வாயில் புகுந்தனர்.
(வி-ரை) திருத்தொண்டு கண்டு - திருத் தொண்டின் உறைப்பினை நேரே கண்டு; தொண்டாவது ஈண்டு அடியார் திருவேடத்தினை அரசரது திருவினும் பெரிதென மதித்து வணங்கி வழிபடுதல்; திருவேடத்தினை அரனெனவே கண்டு வழிபடுக என்பது ஞானநூல்.
களிறு ஏறி - ஏறிவந்த களிற்றினின்றும் இறங்கி வழிபட்டாராதலின் மீண்டும் ஏறி.
கொடிமாட மூதூர் - பெருந்திரு நகரங்களுக்குக் கொடிகள் இன்றியமையாத சிறப்புக்களாம் “விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்....அவையெல்லா மூரல்ல அடவி காடே” (தேவா); அரசரது முடிசூட்டு விழாவின் பொருட்டும் கொடிகள் கட்டி அணிந்தனர் என்றலுமாம். “வீதிக டோறும் வெண்கொடி யோடு விதானங்கள்” (தேவா). கொடிகளுள் வெண்கொடிகளே சிறப்புடையனவாகப் பெரியோர் கருதுவர். கறுப்புக்கொடி அமங்கலக் குறியாம் (474).
மாளிகை - அரசரது திருமாளிகை. இது கொடுங்கோளூரில் உள்ளது: “கோமூதூர் கொடுங்கோளூர்” (3748); இங்குமூதூர்என்றது அதனைக் குறித்தது.
புனைமங்கலம் பொலிய - புனைதல் - அணிசெய்தல். மங்கலம்
- நகர அலங்காரங்களும் மங்களங்களாகிய நிறைகுடம் தூபம் விளக்கு முதலியவையுமாம்; இவை பொலிய என்றது முடிசூடிக்கொண்டு அரசரது வருகையினாலே இவை விளக்கமுற்றன என்பதாம். “அம்பலம் பொலிய” (கோயினான் - 32). இனிப் புனைமங்கலம் பொலிய என்றதற்கு அன்று சூட்டிக்கொண்ட முடி விளங்கி அதனால் உலகம் விளங்கி ஓங்க என்றுரைத்தலுமாம்.
மாளிகை வாயில் - அரண்மனையின் முன் வாயில்; இது யானை தேர் முதலிய ஊர்திகளின்மேல் இருக்கும் நிலையில் அரசர் புகும்படி உயர்ந்த அமைப்புக்களைஉடையது. Portico என்பர் நவீனர். அங்குப் புகுந்த பின்னரே யானையினின்றும் இறங்குதலை மேற்பாட்டிற் கூறுவது காண்க.