பாடல் எண் :3768

யானை மிசைநின் றிழிந்தருளி யிலங்கு மணிமண் டபத்தின்கண்
மேன்மை யரியா சனத்தேறி விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன் பணிமா றப்பின் மலர்தூவி
மான வரசர் போற்றிடவீற் றிருந்தார் மன்னர் பெருமானார்.
21
(இ-ள்) யானைமிசைநின் றிழிந்தருளி - யானையின் மேனின்றும் இறங்கியருளி; இலங்கு...ஏறி - விளங்கும் மணிகளையுடைய மண்டபத்தில் மேன்மை பெற்ற சிங்காசனத்தின் மீது ஏறி; விளங்கும்...பணிமாற - விளங்குகின்ற வெண்கொற்றக் குடைமேலே நிழல் செய்யவும், குவளை போன்ற கண்களையுடைய பெண்கள் வெண்சாமரைகளை ஏந்தியிரட்டவும்; பன் மலர்...போற்றிட - பூக்கள் பலவும் தூவிப் பெருமையுடைய அரசர்கள் துதிக்கவும்; மன்னர் பெருமானார் - அரசர் பெருமானாராகிய நாயனார்; வீற்றிருந்தார் - வீற்றிருந்தருளினர்.
(வி-ரை) யானைமிசைநின் றிழிந்தருளி - ‘மாளிகை வாயிலின் முன்பு உள்ள பித்திகையில்’ யானைமேனின்றும் இறங்கி.
மணிமண்டபம் - அரசர் கொலு வீற்றிருக்கும் அத்தாணி மண்டபம். அரிய ஆசனம் - சிங்காதனம்.
குடை - அரசரது சிங்காசனத்தின்மேல் கவிக்கும் வெண் கொற்றக் குடை; அரச அடையாளங்களுள் ஒன்று.
பானல்...பணிமாற - இவ்விழாக்களில் பெண்கள் சாமரை வீசுதல் மரபு.
மலர் தூவி....போற்றிட - திறையளக்கும் சிற்றரசர் மலர் தூவித் துதித்து வணங்க; மானம் - பெருமை; அரசர் பெருமானார் - இவர் பேரரசராதலின் அவ்வரசர் போற்றினர் என்பது குறிப்பு; இவருக்குக் கீழ்ப்பட்ட அளவிற் சிற்றரசர்களேயாயினும் தாமும் பெருமையுடையார் என்பது. பெருமுக் கோக்களாய் என மேற்பாட்டிற் கூறுவது காண்க.