பாடல் எண் :3769

உலகு புரக்குங் கொடைவளவ ருரிமைச் செழிய ருடன்கூட
நிலவு பெருமுக் கோக்களாய் நீதி மனுநூ னெறிநடத்தி
அலகி லரசர் திறைகொணர வகத்தும் புறத்தும் பகையறுத்து
மலருந் திருநீற் றொளிவளர மறைகள் வளர மண்ணளிப்பார்,
22
(இ-ள்) உலகு...நெறி நடத்தி - உலகத்தைக் காக்கின்ற கொடையினையுடைய சோழரும், உரிமையுடைய பாண்டியரும் என்றிவருடனே கூட நிலவுகின்ற பெரிய மூவேந்தர்களாகி நீதியினை மனுநூல் வழியே நடைபெறச் செய்து; அலகில்...கொணர - அளவில்லாத அரசர்கள் திறை கொண்டுவந்து செலுத்த; அகத்தும் புறத்தும் பகையகற்றி - உள்ளும் புறம்பும் பகைகளை அறுத்து நீக்கி; மலரும்...மறைகள் வளர - விளங்கும் திருநீற்று நெறி வளரவும் வேதங்கள் வளரவும்; மண் அளிப்பார் - நிலவுலகத்தைக் காவல்புரிவாராகி,
(வி-ரை) உலகு...முக்கோக்களாய் - பெருமுக் கோக்கள் - முடி மன்னர்களாகிய தமிழ் மூவேந்தர்கள், சேர சோழ பாண்டியர்கள் எனப்படும் அரசமரபினர்; இம்மரபுகள் படைப்புக்கால முதல் நிலவின என்பர்; இம்மரபுகள் தமிழ் நாடு முழுமையும் அரசாண்டனர்; சில காலங்களில் இமாலயம் வரையும் கடல் கடந்தும் இவராட்சிகள் சென்றன; உலகுபுரக்கும் என்றும், நிலவும் என்றும், நடத்தி என்றும் நிகழ்காலத்திற் கூறியவதனால் ஆசிரியர் காலத்து இம் மூன்று மரபினர்களும் முடி மன்னர்களாய் உலக ஆட்சி புரிந்தனர் என்பதறியப்படும்.
வளவர் - சோழர்; செழியர் - பாண்டியர்; பெரும் முக்கோக்கள் - முடிமன்னர்களாகிய மூவேந்தர்கள். வளம் - செல்வம்; “வளவ னாயினும் அளவறிந் தழித்துண்” (ஒளவை)
உலகுபுரக்கும் கொடை வளவர் - சைவத் துறையிற் பிறழாது வழிவந்த குடியாதலும், அத்துறையிற் பிறழாது உலகை நிறுத்தும் தன்மையும் குறிப்பு; கொடை - உயிர்க்குறுதியும் உடற்குறுதியும் ஒருங்கே பயக்கும் தன்மை பற்றிய குறிப்பு; வளவர் - வளத்தினை உடையவர். “கரிகாற் பெருவளத்தான்” என்பது முதலிய வழக்குக்கள் காண்க.
உரிமைச் செழியர் - வளவருடன் மணஞ்செய் குடியாகிய உரிமையுடைய என்பது குறிப்பு; இந் நாயனாரது காலத்தில் பாண்டியரது மகளாரை மணந்த சோழர் மதுரையில் வந்து தங்கியிருந்த நாட்களில், சோழரும் பாண்டியரும் இந்நாயனார் நம்பிகளுடன் சென்றபோது, கண்டு மகிழ்ந்து அளவளாவினர் (3842) என்றும், இவருடன் கூடிப் பல பதிகள் சென்று வணங்கினர் (1852) என்றும் பின்னர்ப் பெறப்படும் வரலாற்றுக் குறிப்பும் காண்க; பின்னர்ப் பாண்டியர் குலமுதல்வராகிய சோமசுந்தரப் பெருமான் பாணபத்திரனாரைத் திருமுகம் அளித்து இந்நாயனார்பால் அனுப்பி யாட்கொண்ட உரிமைப்பாட்டின் குறிப்பும் காண்க.
உடன்கூட நிலவும் பெருமுக்கோக்களாய் - இக்காலத்தில் இம் மூவேந்தர்களும் உள் நாட்டுப்போர் முதலியனவாகத் தம்முள் மாறுபட்ட நிலைகளின்றி நட்புடனிருந்தனர் என்பதாம்; பின்னர்ச் சோழநாடு பாண்டி நாடுகளில் சேரமன்னராகிய இந்நாயனார் தடையின்றி நட்புரிமையுடன் செய்யும் யாத்திரை வரலாற்றினாலும், சோழ பாண்டியர்களால் விருந்து உபசரிக்கப் பெறும் நிலையினாலும் இது விளங்கும்.
அரசர் திறை கொணர - முடிமன்னராதலின் இவர்கீழ் அமைந்த சிற்றரசர் குறுநிலமன்னர்கள் அவ்வவர்க் களந்த திறை கொணர்ந்து செலுத்தி இவர் வழி ஒழுகினார்கள்.
அகத்தும் புறத்தும் பகை அகற்றி - புறத்துப் பகையாவது பணியாத நட்பில்லாத பகையரசர்களால் வருவது; அகப்பகை தன்னாற், றன்பரிசனத்தால், கள்வரால், உயிர் தம்மால் வருவன (121); பணிந்துவந்த மன்னரைத் திறை கொண்டு, நல்வழி நிறுத்தியும், பணியாதாரை ஒறுத்து அகற்றியும் என்பதாம்; நாட்டு மக்களுள்ளே இந்நாளில் காணும் அரசாங்கப் பகைகளாகிய அரசாகம், ராசத் துரோகம், பலவகைக் கட்சிக் கலகங்கள் முதலாயின அந்நாளில் தமிழ்நாட்டில் இல்லை.
இனி, அகத்துப் பகை என்பது அஞ்ஞானம் காமம் முதலிய தீமைகளால் வருவதென்றும், புறப்பகை ஐம்பொறிகளால் வருவதென்றும், கொண்டு, அவற்றையும் நல்லொழுக்கம் நற்கேள்வி முதலியவற்றில் மக்களை நிறுத்துதலாற் போக்கி என்றலுமொன்று; யான் எனது என்னும் அகங்கார மமகாரங்கள் என்றலுமாம். எல்லாப் பகைகட்கும் இவையே மூலமாதலும் காண்க. இஃது நல்ல அரசாட்சியின் உயர்ந்த நிலை பெற்ற குறிக்கோள்களுள் ஒன்று.
மலரும் - உலகெங்கும் விளங்கும். “அண்டமெலாம் பரந்து” (3087). சிவத்துவத்திலே விளங்கச் செய்கின்ற - (மலர்த்தும்) எனப் பிறவினையாக உரைப்பதுமாம். திருநீற்றொளி வளர என்றது “மிகுசைவத் துறைவிளங்க” (1899) என்ற கருத்துடையது; சிவாகம நெறி ஒழுக்கம் விளங்க என்றதாம்; மேல், மறைகள் வளர என்றது “வேதநெறி தழைத்தோங்க” என்ற கருத்துடையது. மண் அளிப்பார் - உலகை ஆட்சி புரிவாராய்; மண் - உலகம்; நிலமும் நீரும் பலவுமுடைய உலகத்தை மண் என்றது ஆகுபெயர்; மண்ணை அளித்தலாவது அதனில் வாழ் உயிர்களைக் காத்தலாதலின் ஆகுபெயர்; மண்ணளிப்பார் - மேற்கொண்டார் - எனவரும் பாட்டுடன் முடிந்தது; மண்ணளிப்பராகியே அதனுடன் அதன் சிறந்த பயனாக அருச்சனை மேற்கொண்டார் என்பதாம்.
மறைகள் பெருக - என்பதும் பாடம்.