பாடல் எண் :3770

“நீடு முரிமைப் பேரரசா னிகழும் பயனு நிறைதவமுஞ்
தேடும் பொருளும் பெருந்துணையுந் தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே” யெனத்தெளிந்த வறிவா லெடுத்த திருப்பாதங்
கூடு மன்பிலர்ச்சனைமேற் கொண்டார் சேரர்குலப்பெருமாள்.
23
(இ-ள்) நீடும்...கழலே என - நீடுகின்ற உரிமை பொருந்திய பேரரசு செலுத்துவதனால் நிகழ்கின்ற பயனும், நிறையவுள்ள தவமும், தேடியடையும் பொருளும், பெருந்துணையும் ஆக வுள்ளது தில்லையில் திருச்சிற்றம்பலத்தினுள்ளே ஆடுகின்ற திருப்பாதமே யாம் என்று; தெளிந்த அறிவால் - தெளிந்து துணிவு கொண்ட அறிவினாலே; எடுத்த...குலப் பெருமாள் - மேலே தூக்கிய அந்தத் திருவடியினையே பெருகும் அன்பினாலே அருச்சிக்கும் செயலினை மேற்கொண்டனர் சேரர் குலப் பேரரசராகிய நாயனார். (வி-ரை) “நீடும்....கழலே” என - இஃது நாயனார் மனத்துள் தெளிந்த துணிபு. நீடும் உரிமை - படைப்புக் காலமுதல் வழிவழி வந்த; பேரரசு - முடிமன்னராகும் நிலை.
நிகழும் பயனும் - நிறை தவமும் - தேடும் பொருளும் - பெருந்துணையும் - முன்பாட்டிற் கூறிய நீதி நடத்தல் - பகையறுதல் - நீற்றி னொளி வளர்தல் - மறைகள் வளர்தல் என்ற இவை இவராற் காக்கப்படுகின்ற உலகுக்கு - (மக்களுக்கு) - வரும் பயன்கள். இங்குக் கூறியவை அவ்வாறு மண்காவல் செய்கின்ற அரசராகிய தமக்கு வருகின்ற பயன்கள். இந்நாள் அரசாங்க உலகம் முதற்கண் கூறிய உலகுக்கு வரும் பயன்களைத் தானும் உணர்கின்றதில்லை; பிற்கூறிய தமது பயனைச் சிறிதும் உணர்கின்றதில்லை; அரசாங்க உலகம் இவ்விரண்டினையும் உணர்ந்து ஒழுகுமாயின் மக்கட் கூட்டத்தின் நிகழும் கேடுகளும், உயிர்களுக்கு நேரும் தீமைகளும் ஒழியும்; அரசாங்க உலகம் உணருமோ? இறைவ ரருள்வாராக.
பேரரசால் நிகழும் பயன் - அரசு புரிவதனால் தமக்கு வரும் பயன். நிகழ்தல் - வருதல் - பெறுதல்; நிறைதவம் - முன்னைத் தவஞ் செய்தாரே அரசு செய்யும் உரிமை பெறுவர்; அத்தவம் குறைவுடையதாதலின் உலகப் பிறவியும் உலகபோகமும் தந்தது; அதனை நிறைவாக்குதல் இப்போகங்களை இறைவன் வசமாக்கி வீடு பெறும் சாதனமாக்குதலே யாதலின் பேரரசின் பயன் நிறை தவம் என்றார்; தேடும் பொருள் - தவத்தால் தேடியடையப்படும் உறுதிப் பொருள்; பெருந்துணை; ஏனைத் துணை யெனப்பட்ட பொருட்சார்பு உயிர்ச்சார்புகள் எல்லாம் துணையில்லா தொழியப், பெத்த நிலையில் பிறவிகள் தோறும் நீங்காது உயிர்த்துணையாய் உள்ள வரும், முத்தி நிலையில் திருவடிக்கீழ் இருத்தி மீளாதமாளாத இன்பம் தருபவருமாகிய துணைவர்; இத்துணையே தேடும் பொருளாம் என்பது. “பெருந்துணையைப் பெரும் பற்றப் புலியூ ரானை” (தேவா) என்றலின், நாயனார் அவ்வாறே தில்லைத் திருச்சிற்றம்பலத்துள் ஆடுங்கழலின் அருச்சனை மேற்கொண்டார் என இத்திருப்பாட்டின் கருத்துக்களைத் தொடர்ந்து முடிபுபடுத்திக் கொள்க. “செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின், மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென” (சிலப்) என்று இம்மரபில் முந்தையோராகிய இளங்கோவடிகள் தமது அரும் பெரும் காவியத்தை முடித்துக் காட்டியது ஈண்டு நினைவுகூர்தற்பாலது.
ஆடுங்கழலே - ஆம் - என ஆக்கச் சொல் வருவிக்க; ஆடும் - ஐந்தொழில்களுள், அருளும் தொழில் குறித்தது. கழல் - அருளும் தொழில் குறித்தது.
எடுத்த திருப்பாதம் - குஞ்சிதபாதம் என்பர்; எடுத்த - தூக்கிய; உயிர்களை மலக்குழியினின்றும் எடுத்த என்பதும் குறிப்பு. “எடுக்கு மாக்கதை”;
கூடும் - பெருகும்; அர்ச்சனை - வழிபாட்டுமுறைகளின் தொகுதி; அர்ச்சனை மேற்கொண்டவகை மேல்வரும் பாட்டில் விரிக்கப்படும்.
சேரர் குலப் பெருமாள் - பெருமாக் கோதையார்.
பொறைசால நிகழும் - என்பதும் பாடம்; அது சிறப்பிலது.