வாசத் திருமஞ் சனம்பள்ளித் தாமஞ் சாந்த மணித்தூபம் தேசிற் பெருகுஞ் செழுந்தீப முதலா யினவுந் திருவமுதும் ஈசர்க் கேற்ற பரிசினா லருச்சித் தருள வெந்நாளும் பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பி னொலியளித்தார். | 24 | (இ-ள்) வாசத்திருமஞ்சனம்...திருவமுதும் - மணமுடைய திருமஞ்சனமும், திருப்பள்ளித் தாமமும், சாந்தமும் அழகிய தூபமும், ஒளிபெருகும் செழியதீபங்களும் முதலாயின உபசாரங்களும் திருவமுதும் அமைத்து, ஈசர்க்கு.....அருச்சித் தருள - இறைவருக்குத் தகுதியாக விதிக்கப்பட்ட தன்மையினாலே அருச்சனை செய்தருள; எந்நாளும் - ஒவ்வோர் நாளும்; பூசைக்கமர்ந்த...அளித்தார் - பூசைக்கு விரும்பி எழுந்தருளிய பெருங்கூத்தராகிய இறைவர் அழகிய சிலம்பின் ஒலியினைக் கேட்கும்படி அளித்தருளினர். (வி-ரை) வாச...திருவமுதும் - இவை இறைவழிபாட்டில் புறப்பூசைக்குரிய பொருள்களும் அங்கங்களுமாம்; திருமஞ்சனம் - திருமஞ்சன நீராட்டுதல்; வாசம் - திருமஞ்சன நீரினுள் மணமலர்களையும் பசுங்கற்பூரம் குங்குமப்பூ முதலியவாசனைப் பண்டங்களையும் இட்டு மணங் கூட்டும் மரபு குறித்தது. மஞ்சனம் - திருமுழுக்கு என்னும் அபிடேகத்தினையும், பள்ளித்தாமம் - சாந்தம்; இவை அலங்கரித்தலையும் குறிப்பன. மணித்தூபம் - தீபம் - இவை உபசாரவகைகளாதலின் உரிய அடைமொழிகள் தந்தும் வேறு பிரித்தும் கூறினார்; இவற்றின் வேறாதலின் திருவமுதினையும் உம்மை தந்து பிரித்துக் கூறியநிலையும் கண்டுகொள்க. வாசம் - என்பதனைப் பள்ளித்தாமம், சாந்தம், தூபம் என்றவற்றினுடனும் கூட்டுக; முதனிலைத்தீபம். தேசில்....தீபம் - தேசு - ஒளி; ஞானம் என்றதும் குறிப்பு; “விளக்கிட்டார் வேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்Ó (தேவா) என்றபடி தேசிற்பெருகும் - ஞான ஒளி மிகும் என்றுரைக்கவும் நின்றது. ஈசர்க்கேற்ற பரிசு - சிவனது பூசைக்குத் தக்கனவென்று சிவாகமங்களில் விதித்தபடி. சிவார்ச்சனைக்கு அங்கமாகிய ஐந்து உபசாரங்களும் சொல்லியவாறு; அவை;- (1) பிருதுவி சம்பந்தம் - பார்த்திவோபசாரங்கள். திருப்பள்ளித் தாமம், சந்தனம், திருவமுது முதலியன;- (2) நீர் சம்பந்தம் - ஜலோபசாரங்கள். திருமஞ்சனம் - பால் - இளநீர் முதலியன;-(4) தீ சம்பந்தம் - தைஜசோபசாரங்கள். தீபம், கற்பூரம், பொன், மணிப்பணிகள் முதலியன;- (4) காற்று சம்பந்தம் - வாயவ்யோபசாரங்கள். தூபம், சாமரை முதலியன;- (5) ஒலி சம்பந்தம் - ஆகாசோபசாரங்கள். மணி, வாத்தியம், துதி முதலியன; (சிவப்பிரகாச தேசிகர் குறிப்பு). அர்ச்சித்தல் - இங்கு, வழிபடுதல் என்ற பொருள் தந்தது; எந்நாளும் - அர்ச்சித்தருள என்றும், எந்நாளும் அளித்தார் - என்றும் கூட்டிச் சாதனத்துக்கும் பயனுக்கும் பொருந்த உரைக்க நின்றது. அமர்தல் - விரும்பி எழுந்தருளியிருத்தல். கூத்தர் - நடராசப்பெருமான்; இவ்வாறு நாயனாருக்கு நாளும் சிலம்பொலி கேட்பித்தருளிய இம்மூர்த்தி இன்றும் திருவஞ்சைக்களத்தில் திருக்கோயிலில்வைத்து வழிபடப்படுகின்றனர்; அவரது பீடத்தில் “திருவஞ்சைக்களம் சபாபதிÓ என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சிலம்பி னொலியளித்தார் - சிவயோகிகளுக்குப் புலனாகும் நாதச் சிலம்பின் ஓசை; நாயனார் சிவயோகங் கைவந்தவராதலும் காண்க; சிலம்போசை பத்து வகை நாதங்களுள் ஒன்று; “தூமணி ஓசைÓ, “சங்குதிரண்டெழுமோசைÓ (திருவா). |
|
|