நம்பர் தாளின் வழிபாட்டா னாளு மின்புற் றமர்கின்றார் இம்ப ருலகி லிரவலர்க்கும் வறியோ ரெவர்க்கு மீகையினாற் செம்பொன் மழையா மெனப்பொழிந்து திருந்து வென்றி யுடன்பொருந்தி உம்பர் போற்றத் தம்பெருமாற் குரிய வேள்வி பலசெய்தார்; | 25 | (இ-ள்) நம்பர்....அமர்கின்றார் - இறைவருடைய திருவடிகளிற் செய்யும் வழிபாட்டினாலே நாடோறும் இன்பம் பெற்று எழுந்தருளி யிருக்கின்றாராகிய நாயனார்; இம்பருலகில்...பொழிந்து - இவ்வுலகிலே தம்பால் வந்து இரந்தோர்களுக்கும் வறியவர்களுக்கும் எல்லாருக்கும் வேண்டியவாறே ஈகின்ற தன்மையினாலே செம்பொன்னை மழைபோலப் பொழிந்து; திருந்து...பொருந்தி - திருந்தும் வெற்றியுடனே கூடி; உம்பர்...செய்தார் - தேவர்கள் போற்றத் தமது பெருமானாகிய இறைவருக்கு உரிய வேள்விகள் பலவற்றையும் செய்தனர். (வி-ரை) நாயனார் உலகங் காவல் பூண்டு அரசளிக்கு நிலையினை “மண்ணளிப்பார்Ó (3769) என்ற பாட்டானும், அவ்வரசாட்சியினை இறைபணிக்கு முட்டுப்பாடின்றி நிகழ்த்திய நிலையினை அதன்பின் இரண்டு பாட்டுக்களானும் கூறிய ஆசிரியர், அந்நிலைகளினால் தாமும் உலகும் பெற்ற பயனாகிய இன்பத்தினை இப்பாட்டாற் கூறுகின்றார். நம்பர்...அமர்கின்றார் - நாளும் - நாடோறும் இன்பமுற்று என்றும், நாடோறும் செய்யும் வழிபாட்டால் என்றும் உரைக்க; வழிபாடு - இதன் விரிவு முன்பாட்டில் உரைக்கப்பட்டது. இச்சொல் இன்றும் மலையாள நாட்டில் இப்பொருளில் வழங்குகின்றது. அமர்கின்றார் - அமர்கின்றாராகி; அமர்கின்றார் - செய்தார் - என்று முடிக்க. இம்பர் உலகில் - உம்பர் போற்ற - இவரது அரசாட்சியினால் மண்ணுலகமேயன்றி விண்ணுலகமும் இன்பம் பெற்றது என்பதாம். வானோரும் இவ்வுலகில் செய்யப்படும் வேள்வி முதலியவற்றால் மகிழ்ச்சிபெற வுள்ளார்கள் என்பது உண்மை. “மண்ணுலக மேயன்றி வானுலகுஞ் செய்தபெரும், புண்ணியத்தின் படையெழுச்சி போலெய்தும் பொலிவெய்தÓ (2549); “சிறப்பொடு பூசனை செல்லாது வானம், வறக்குமேல் வானோர்க்கு மீண்டுÓ (குறள்) என்பன முதலிய கருத்துக்கள் காண்க. இவ்வேள்விகளிற் கலந்துகொண்டு வானோர் போற்ற என்றலுமாம். “மேலையிமையோர்களும்...சீலமறை யோர்களுட னோமவினை செய்தார்Ó (1928). இரவலர்க்கும் வறியோ ரெவர்க்கும் - இரவலர் - தம்மிடம் வந்து இரப்போர்; யாசிப்போர்; வறியோர் - அவ்வாறு யாசிக்காமல் வறுமையினாலே துன்பப்பட்டு வாழ்வோர்; இத்தகையோர் பலதிறத்தின ராதலின் எவர்க்கும் என்றார். ஈகையினால் - ஈயும் தன்மையினால்; கொடைப் பெருக்கினாலே; மழையாம் என - மழைபோல; மழையாம் எனச் செம்பொன் பொழிந்து என்க. “கார் கொண்ட கொடைக்கழறிற் றறிவார்Ó என்பது முதனூல். வென்றியுடன் பொருந்தி - யாண்டும் தடைபடாது செல்லும் வெற்றிகொண்டு; இஃது அரசாட்சியின் விறலும் மேன்மையும் குறித்தது; திருந்தும் - உலகம் திருந்துதற் கேதுவாகிய என்று காரணப்பொருளில் வந்தது; இவர் கொண்ட வெற்றிகள் மண்ணாசை காரணமாகப் பெற்றன வல்ல; அவ்வந் நாட்டு மக்களின் திருத்தம் காரணமாகவே நிகழ்ந்தன என்பதாம். இந்நாட் காணும் பேராசைக் கொடும் பூசல்களின் காரணங்களைக் கருதினால் இதன் மேன்மை நன்கு விளங்கும். ஈகை - வென்றி - “ ஈறில்லாத் தாவில் விறலும் தண்டாத கொடையும்Ó (3761) என இத்திறங்களை அரசர்க் கின்றியமையாத தன்மைகளாக இவர் இறைவர் பால் வேண்டிப் பெற்றனர்; அவ்வாறே ஆட்சியும் நிகழ்த்தினர் என்க. வேள்வி - இவை சிவவேள்விகள். இறைவழிபாட்டின் சிறப்புக்கள்; உம்பர் போற்ற - அவ்வேள்விகளாற் பயன் பெற்று வானோர்கள் மகிழ்ந்து துதிக்க. |
|
|