இன்ன வண்ண மிவரொழுக வெழில்கொள் பாண்டி நன்னாட்டு மன்னு மதுரைத் திருவால வாயி லிறைவர் வருமன்பாற் பன்னு மிசைப்பா டலிற்பரவும் பாண னார்பத் திரனார்க்கு நன்மை நீடு பெருஞ்செல்வ நல்க வேண்டி யருள்புரிவார், | 26 | (இ-ள்) இன்ன வண்ணம் இவர் ஒழுக - முன்கூறிய இத்தன்மையாக இவர் ஒழுகியிருக்க; எழில்கொள்...இறைவர் - அழகுடைய பாண்டி நன்னாட்டில் நிலைபெற்ற மதுரையில் திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் இறைவராகிய சோமசுந்தரப்பெருமான்; வரும் அன்பால்...அருள்புரிவார் - வருகின்ற அன்பினாலே சொல்கின்ற இசைப்பாட்டுக்களாற் றுதிக்கும் பாணனாராகிய பத்திரனாருக்கு நன்மைபொருந்திய பெருஞ் செல்வம் தரவிரும்பி அருள் புரிவாராகி, (வி-ரை) பாண்டி....இறைவர் - பாண்டி நன்னாட்டு - நாடு கூறியது; மன்னும் மதுரை - நகரம் கூறியது; திருவாலவாயில் - கோயில் கூறியது; இறைவர் - சோமசுந்தரக் கடவுள்; அதில் விளங்க எழுந்தருளி யிருக்கும் கடவுளைக் கூறியது; வரும் - உறைப்புடைய திருத்தொண்டின் ஒழுக்கத்தினால் எழுகின்ற. பன்னும் இசைப்பாடல் - கீதங்கள்; பன்னுதல் - பல முறையும் சொல்லுதல். இசைப்பாடல்களைப் பலமுறையும் பன்னிப்பாடும் மரபு குறித்தது; இசை - இயற்பாடலிற் பிரித்துணர இசைப்பாடல் என்றார். பாணனார்.....நல்கவேண்டி - பாணபத்திரருக்குச் திருமுகம் கொடுத்த வரலாறு திருவிளையாடற் புராணத்துட் கூறப்படும்; அஃது ;- பாணபத்திரனார் பொருட்டு இறைவர் விறகு விற்ற திருவிளையாடல் செய்தருளினர்; அத்திருவிளையாடல் நிகழ்ந்த பின்னர்ப் பத்திரனார் இறைவர் வழிபாடன்றி வேறு ஒன்றும் செய்யாராகி நிகழவே இலம்பாடெய்தி வருந்தினர்; சில நாள் இறைவர் பாண்டியனது சேமத்திலிருந்த செல்வங்களைக் கொணர்ந்து ஈந்தனர்; பின் “மதிமலி புரிசைÓ என்ற பாசுரம் எழுதிய ஓலை தந்து சேரர்மன்னவர்பா லனுப்பினர்; அம்மன்னவர்க்கும் கனவிலுணர்த்தினர்; அவர் உணர்ந்து தூதர்களை அனுப்பி நகருள் தேடுவித்துக் கண்டு சென்று வணங்கித் திருமுகத்தையும் பத்திரனாரையும் யானைமீ தேற்றி நகர் வலங்செய்வித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்து மகிழ்ந்து தமது சேமநிதியறையினைத் திறந்து வேண்டியன எல்லாங் கொள்ள நல்கி வழியனுப்பினர் என்பதாம். இதனுள் சேரனாருக்குக் கனவில் அருளிச்செய்தார் என்றதும், அவர் பத்திரனாரைத் தூதரை அனுப்பி நகரினுட் டேடிக் கண்டு சென்று அணைந்தனர் என்றும் வேறுபாடுகள். இவை இறை திருவாக்காகிய முதனூலேயாகிய இப்புராணத்துடன் வேறுபடும் நிலையில் மொழிபெயர்ப்புத் தலபுராணங்களுள் உபசாரம் பற்றிக் காணும் சிற்சில மாறுபாடுகள் என்ற அளவில் கொள்ளத்தக்கன. நன்மை நீடு பெருஞ்செல்வம் - இறைவர் அருளால் வருவதாதலின் நீண்ட நலமும் பெருமையும் பெற்ற செல்வம்; ஏனைய எந்தச்செல்வமும் இவ்வாறாகா என்பதாம்; பிறிதினியைபு நீக்கிய விசேடணம். அருள்புரிவார் - முற்றெச்சம்; அருள் புரிவாராய் - என்று (3774) - திருமுகம் கொடுத்தார். (3775) என்று மேல் வரும் பாட்டுக்களுடன் முடிக்க. பாணனார் பத்திரனார் - பாணபத்திரர்; பாணர் - மரபு குறித்தது; பத்திரனார் - இவரது பெயர் குறித்தது. இவர் வேறு; திருநீலகண்ட யாழ்ப்பாணர் வேறு; இருவரும் ஒருவரேயென மயங்கியறிவார் சிலர்; அவ்வாறு மயங்கி யறிந்து பூச லிடுவாருமுண்டு. |
|
|