சங்கப் புலவர் திருமுகந்தந் தலைமேற் கொண்டு பத்திரனார் அங்கப் பொழுதே புறப்பட்டு மலைநா டணைய வந்தெய்தித் துங்கப் புரிசைக் கொடுங்கோளூர் தன்னிற் புகுந்து துன்றுகொடி மங்கு றொடக்கும் மாளிகைமுன் வந்து மன்னர்க் கறிவித்தார். | 29 | (இ-ள்) பத்திரனார் - பாணபத்திரர்; சங்கப்புலவர்...தலைமேற் கொண்டு - தலைச் சங்கப் புலவனாராகிய சோமசுந்தரமூர்த்தி அளித்தருளிய திருமுகத்தினைச் சிரமேற் றாங்கிக்கொண்டு; அங்கு அப்பொழுதே புறப்பட்டு - அங்குநின்றும் அப்பொழுதே புறப்பட்டுச் சென்று; மலைநாடு.....எய்தி - மலைநாட்டினைச் சேரவந்து சேர்ந்து; துங்கப்புரிசை...புகுந்து - பெரிய மதிலையுடைய கொடுங்கோளூரினிற் புகுந்து; மங்குல்....வந்து - மேகந் தொடும் அளவு உயர்ந்த அரசரது திருமாளிகையின் முன்னர் வந்து; மன்னர்க்கு அறிவித்தார் - அரசருக்கு அறிவித்தனர். (வி-ரை) சங்கப்புலவர்; சோமசுந்தரமூர்த்தி; தலைச் சங்கத்தில் தலைவராயிருந்தவர்; இறையனார் என்ற பெயருடன் விளங்கியவர் திருவாலவாய்ச் சிவபெருமான் என்பது வரலாறு. “திருந்தியநூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்Ó (1668); “தலைச் சங்கப்புலவனார்Ó (2565); பாசுரமாகப் பாடித் திருமுகம் அளித்தமையால் புலவர் என்றார். புலவர் திருமுகம் - ஆறாம் வேற்றுமைத்தொகை. அங்கு - அங்குநின்றும்; அப்பொழுதே - “தாழா தேகி வருகÓ (3774) என்று இறைவர் அருளியமையால் அப்பொழுதே புறப்பட்டனர் என்பதாம். புறப்பட்டு - நாடு - எய்தி - ஊர் - புகுந்து - மாளிகை முன்வந்து - என்று “தாழாதுÓ என்றதற் கேற்ப பாண்டி நாட்டினின்றும் சேரநாடு சேர்ந்ததும், தலைநகரத்தினை எய்தியதும், திருமாளிகையின்கண் வந்ததும் ஒவ்வோர் வினையெச்சங்களால் விரைந்து இங்குச் செலுத்திக் கூறிய கவிநயம் கண்டு கொள்க. பத்திரனார் மதுரையினின்றும் சேர நாடு புகுந்த வழி, கண்ணகி போந்த வழியாகச் சிலப்பதிகாரத்திற் கருதும் வழிபோலும் என்பது ஆராய்ச்சிக்குரியது. கொடிமங்குல் தொடக்கும் - மாளிகைமேற் கட்டிய கொடிகள் மேகமண்டலத்துள் விளங்கும்படி உயர்ந்த என்பது. “மாளிகைக் கொடி, யருக்கன் மண்டலத்தணாவும்Ó (பிள் - ஆரூர் நட்டரா - 1). அறிவித்தார் - வாயில் காவலரால் அறியச் செய்தனர். இறைவரது திரு முகத்துடன் தாம் போந்த செய்தியினை எனச் செயப்படுபொருள் விரிக்க; மேல் வரும் பாட்டுப் பார்க்க. திருமுகத்தை - என்பதும் பாடம். |
|
|