பாடல் எண் :3778

“அடியேன் பொருளாத் திருமுகங்கொண் டணைந்தÓ தென்ன, வவர்தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக் கொடுத்து வணங்கக், கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப் புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
31
(இ-ள்) அடியேன்...என்ன - அடியேனையும் பொருளாகக் கொண்டு திருமுகத்தினைக் கொண்டணைந்ததே! என்று கூற; அவர்தாமும்....வணங்க - அந்தப் பாணனாரும் கொடியிலே சேர்ந்த விடையினை உடைய இறைவர் அளித்த திருமுகத்தினைக் கையிற் கொடுத்து வணங்குதலும்; கொற்றவனார்....வீழ்ந்தெழுந்தார் - அரசனாரும் அத்திருமுகத்தினை வாங்கி, அதனைத் தமது திருமுடிமேற் கொண்டு ஆனந்தக் கூத்தாடி மொழிகுழறிக் கண்களினின்றும் பொழியும் ஆனந்தக் கண்ணீர் பெருகித் திருநீறிட்ட மார்பில் வழிந்து பரவிவீழ நிலத்தில் பலமுறையும் வீழ்ந்தெழுந்து வணங்கினார்.
(வி-ரை) “அடியேன்...அணைந்ததுÓ - இது, அற்புத மெய்திச் சேரர் பெருமான் கூறிய மொழி; பொருளா - பொருட்படுத்தி; ஒரு பொருளாக எண்ணி; அடியேனையும் என்று இரண்டனுருபும் இழிவு சிறப்பும்மையும் தொக்கன; “அடியேனைப் பொருளாக வளித்த திரு முகக்கருணை, முடிவேதென் றறிந்திலேன்Ó (3841), “என்னை யும்பொரு ளாகவின் னருள்புரிந் தருளும்Ó (2125),“என்னையோர் பொருளாக் கொண்டே யெம்பிரா னருள்செய் தானேல்Ó (4185) என்பனவாதியாக வருபவை காண்க.
கொடிசேர் விடையார் - விடைசேர் கொடியார் என்பதாம்; இடபக் கொடியினை உடையவர்; சிவபெருமான்.
முடிமேற் கொண்டு - அத்திருமுகத்தினைத் தம் சிரத்தில் ஏற்றிக்கொண்டு.
கூத்தாடி - “ஆடுகின்றிலை கூத்துÓ (திருவா).
பலகால் - 3 - 5 - 7 முதலாக நிலமுற வீழ்ந்து வணங்கும் முறைகள் சிவாகமங்களுள் விதிக்கப்படுவன; இங்கு ஆராமையால் அவ் விதியினுள்ளும் அமையாது பல முறையும் என்றபடி; மேலும் “பலகால் தொழுதுÓ (3779) என்பது காண்க. வீழ்ந்தயர்வார் - என்பதும் பாடம்.