பரிவிற் போற்றித் திருமுகத்தைப் பலகாற் றொழுது படியெடுக்க உரிய வகையா லெடுத்தோதி யும்பர் பெருமா னருள்போற்றி விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு மேவு முரிமைச் சுற்றமெலாம் பெரிதும் விரைவிற் கொடுபோந்து பேணு மமைச்சர்க் கருள்செய்வார், | 32 | (இ-ள்) பரிவிற் போற்றி...தொழுது - அன்பினாலே துதித்துத் திருமுகத்தினைப் பலமுறையும் வணங்கி; படி...ஓதி - அதன் சுருளினை நீக்கி எடுத்தற்குரிய வகையினாலே எடுத்து விரித்து வாசித்து; உம்பர்...அருள் போற்றி - தேவ தேவராகிய இறைவரது திருவருளினைத் துதித்து; விரி...புக்கு - ஒளி வீசும் பொன்மாளிகையினுள்ளே புகுந்து; மேவும்...போந்து - பொருந்தும் உரிமைச் சுற்றத்தார்கள் எல்லாரையும் மிக விரைவிற் கொண்டு சார்ந்து; பேணும்...அருள் செய்வார் - காக்கும் மந்திரிகளுக்கு அருள் செய்வாராய், (வி-ரை) பரிவு - அன்பின் மிகுதி. படி எடுக்க உரிய வகை - படி - சுருண்ட அதன் படியினை; எடுக்க உரிய - நீக்கி எடுத்தற்குரிய என்பது; “சுருள்பெறு மடியை நீக்கி விரித்துÓ (204) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. இதற்கு இவ்வாறன்றிப் “பிரதி எடுத்தற்குரிய படி பிரித்துÓ என்று உரைத்து, “வந்த திருமுகம் சிதைவுறினும் பிரதி வேண்டுமாகலின்Ó என்று விசேடமும், இயைபின்றி உரைத்தனர் முன் உரைகாரர்; படி எடுத்தலால் அதற்குரிய வகையாய் என்றும், முத்திரையை உடைக்க என்றும் உரைப்பர் என்பர் இராமநாதச் செட்டியார். மாளிகை புக்கு - திருமாளிகையினுள் பாணபத்திரனாரை அழைத்துக் கொண்டு இருத்தி உபசரித்து என்றும், சுற்றமெலாம் - கொடுபோந்து பணிவித்து என்றும் வருவித்து உரைத்துக்கொள்க. அருள் செய்வார் - என (3780) - அருள் செய்ய - மந்திரிகள் - கொண்டுவந்து பணிந்தார்கள் (3781) என்று இம் மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிக்க. பேணும் - உலகம் பேணும்; பேணற் குதவியாய் நிற்கும். |
|
|