பாடல் எண் :3780

“நங்கள் குலமா ளிகையிதனு ணலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு வகையிற் பொலிந்த பண்டாரம்
அங்க ணொன்று மொழியாமை யடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேற் சமைய வேற்றிக் கொணருÓமென,
33
(இ-ள்) நங்கள்...பண்டாரம் - நமது இந்த அரச மாளிகையினுள்ளே நலமிக்க செல்வக் குவியல்களாய் மேன்மேல் வளர்ந்து நிறைந்த பலவேறு வகைகளில் விளங்கிய சேமத்தினுள்; அங்கண்...கொணரும் என - அங்கு ஒன்றும் எஞ்சாமல் முழுதும் எடுத்துப் புறப்பட்டுத் தங்கத் தக்கபடி பொதிசெய்து ஆள்களின் மேலே அமையும்படி ஏற்றிக்கொண்டு வாருங்கள் என்று,
(வி-ரை) குலமாளிகை - வழிவழி வரும் அரச மாளிகை.
பலவேறுவகை - வெள்ளி - பொன் - மணி - முதலாயின.
பண்டாரம் - சேமம்; பொக்கிசம் என்பர்.
அங்கண் ஒன்றும் ஒழியாமை - அங்கு ஒன்றும் எஞ்சாமல்; அடைய - முழுதும், நிறைய. புறப்பட்டு - அப்புறப்படுத்தி எடுத்து.
தங்கும் பொதி செய்து - வழிப்பயணத்தில் நீடு செல்லத்தக்க வகையாற் பொதிந்து (well packed); சமைய - அமையும்படி.
என - சேரர் - அருள் செய்ய - என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டுக.