பரந்த நிதியின் பரப்பெல்லாம் பாண னார்பத் திரனார்க்கு நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி “மற்றிவையும் உரந்தந் கியவெங் கரிபரிகண் முதலா முயிருள் ளனதனமும் புரந்த வரசுங் கொள்ளுÓமென மொழிந்தார் பொறையர்க் கிறையவனார். | 35 | (இ-ள்) பரந்த...காட்டி - வெவ்வேறு வகைகளாகப் பெருகிய நிதியின் பெருக்கை எல்லாம் பாணபத்திரனாருக்கு வரிசை பெற்ற நிதிக் குவியல்களை அவ்வவ் வரிசைபெறக் காட்டி; பொறையர்க்கிறையவனார் - சேரர்களின் மன்னவராகிய சேரமான் பெருமாள்; மற்றிவையும்...கொள்ளும் என - இவைகளையும் மற்றும் வலிமை பொருந்திய வெவ்விய யானைகள் முதலாக உள்ள உயிருள்ள பொருள்களாகிய செல்வங்களையும், அடியேன் காவல்புரியும் அரசாட்சியினையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று; மொழிந்தார் - சொன்னார். (வி-ரை) பரந்த நிதியின் பரப்பு எல்லாம் - நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்து - வகைகளாற் பலவாதலும் தொகையாற் பலவாதலும் குறித்தன. இவையும் மற்றும் - உயிருள்ளன தனமும் - அரசும் என்க; மற்றும் - இவையேயன்றி என்ற பொருளில் வந்தது; உயிருள்ளன தனமும் - யானை, குதிரை, பசுக்கள் முதலியவை உயிருள்ள செல்வங்கள்; இதனால் நிரைத்துக் காட்டிய இவை உயிரில்லாத பொருள்கள் என்றது குறிப்பு. புரந்த அரசு - அரசு - அரசாட்சி புரியும் நாடு முழுமையும்; புரக்கும் என்னாது புரந்த என்று இறந்த காலத்தாற் கூறியது, அதன்மேல் உள்ள தமது ஆட்சியினை நீங்கி அவர்பால் ஒப்புவித்த குறிப்பு. |
|
|