பாடல் எண் :3784

இறைவ ராணை மறுப்பதனுக் கஞ்சி யிசைந்தா ரிகல்வேந்தர்;
நிறையு நிதியின் பரப்பெல்லா நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண்கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்.
37
(இ-ள்) இறைவர்...இகல்வேந்தர் - வலிய வேந்தராகிய சேரலனார் இறைவரது ஆணையினை மறுப்பதற்கு அஞ்சி அதற்கு இசைந்து நின்றார்; நிறையும்...கொண்டே - நிறைந்த நிதியின் பெருக்கங்களை யெல்லாம் நிலம் நெளியும்படி உடனே கொண்டு; உறை...கொண்டு - துளிக்கின்ற மும்மதங்களையுடைய யானையும் குதிரையும் உள்ளிட்டவற்றிலும் வேண்டுவனவற்றைக் கைக்கொண்டு; பெரும்பாணர் - பெரிய பாணராகிய பத்திரனார்; ஓர்...போந்தார் - தாம் ஒரு பிறைபோன்ற வெள்ளிய கொம்பினையுடைய யானையினை மேல்கொண்டு போந்தனர்.
(வி-ரை) இறைவராணை.......இகல்வேந்தர் - இறைவரது ஆணை என்றமையால் அதனை மறுப்பது அடாது என்றஞ்சினார். இகலுடையாராயினும் ஆணைக்கு உட்படவேண்டும் என்பது குறிக்க இங்கு இகல்வேந்தர் என்றார். இகல் - தடுக்கலாகா வலிமை; “தாவில் விறலும்Ó (3761).
நிலத்தை நெளிய - பாரம் தாங்கமாட்டாது நிலமும் நெளிவுபட;
களிறு பரி உள்ளிட்டன வேண்டுவன - “உயிருள்ளன தனமும்Ó (3782) என்று கூறிக் கொடுத்தாராதலின் அவற்றுள் தமது தேவைக்கு வேண்டுவனவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டார் என்பதாம். “வேண்டிற் றெல்லாம் குறைவின்றித் தரÓ (3774) என்பது இறைவராணை யாதலின் வேண்டுவன மட்டில் பெற்றுக் கொண்டனர்.
ஓர் - களிறு - என்று கூட்டுக. பிறை வெண் கோடு - பிறை போன்ற வெள்ளிய கொம்பு; மெய்யும் உருவும் பற்றி வந்த உவமை.
களிற்று மேல் கொண்டு - மலைநாட்டரசரது கொடையாகலின் அச்சிறப்புக் காட்ட அந்நாட்டிற் கொண்டு போந்தார்.
பெரும்பாணர் - பாணருள் ஒரு பிரிவினர்; யாழ்பற்றி வந்ததென்பர்; “பெரும்பாணர்வரவுÓ (2030)
அஞ்சி இருந்தார் - என்பதும் பாடம்.