பண்பு பெருகும் பெருமாளும் பாண னார்பத் திரனார்பின் கண்கள் பொழிந்த காதனீர் வழியக் கையாற் றொழுதணைய நண்பு சிறக்கு மவர்தம்மை நகரின் புறத்து விடைகொண்டு திண்பொற் புரிசைத் திருமதுரை புக்கார் திருந்து மிசைப்பாணர். | 38 | (இ-ள்) பண்பு...அணைய - சிவனடிமைத் திறத்தின் பண்பு பெருக நிகழும் சேரமான் பெருமாளும் பாணபத்திரனார் பின்னே கண்கள் பொழிந்த ஆனந்தக்கண்ணீர் முகமெலாம் வார்ந்து மார்பின் வழியக் கைகள் கூப்பித் தொழுதபடியே அணைய; நண்புசிறக்கும்...விடைகொண்டு - நண்பிற் சிறந்த அவர் பாலின் அந்நகரின் புறத்தே விடைபெற்றுக்கொண்டு; திண்...பெரும் பாணர் - திருந்திய இசையினையுடைய பாணபத்திரனார் திண்ணிய பொன் பூண்ட மதில் சூழ்ந்த திரு மதுராபுரியினிற் சேர்ந்து உள்ளே புகுந்தனர். (வி-ரை) பண்பு - சிவன்பால் அடிமைத்திறம். பத்திரனார் பின் - தொழுதணைய - பெரியோர்களை வழி விட்டனுப்புங்கால் அவர் பின் பதினான்கடியேனும் ஏழடியேனும் நடந்து சென்று வழிவிட்டு விடை பெறுதல் வேண்டு மென்பது விதி; ஆனால் இங்கு அன்பின் மேம்பாட்டினால் சேரனார் நகரின் புறம் வரையிற் பின்சென்றனர்; அங்கும் தாம் விடைகொடாது பத்திரனார் நின்மின் நின்மின் என்ற அமைத்து விடைகொள்ளும் வரையிற் சென்றனர் என்க. அன்பின் மேம்பாடு கண்கள் ....தொழுது - என்றதனால் அறியப்படும். காதல் நீர் - காதல் மிகுதியால் வரும் கண்ணீர்; வழிய - முகத்தினும் மார்பினும் வழிய; “முகமெலாங் கண்ணீர் வாரÓ (தேவா) “காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கிÓ (தேவா); “மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும்Ó (1490). நகரின் புறத்து - விடைகொண்ட எல்லையினைக் குறித்தது. புரிசை - “மதிமலி புரிசைÓ (திருமுகப் பாசுரம்). திருந்தும் இசை - திருந்துதல் - அன்பு மேலீட்டினால் எழுதல்; இசை - இங்கு யாழிசையினையே யன்றிப் புகழினையும் குறித்தது. |
|
|