பாடல் எண் :3786

வான வரம்பர் குலம்பெருக்கு மன்ன னாரு மறித்தேகிக்
கூன லிளவெண் பிறைக்கண்ணி முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண் டபத்து ளரசு வீற்றிருந்தார்.
39
(இ-ள்) வானவரம்பர் ...மறித்து ஏகி - சேரர் குலத்தைப் பெருகச் செய்யும் மன்னராகிய சேரமானாரும் திரும்பிச் சென்று; கூனல் ....ஏத்தி - வளைந்த இளைய வெள்ளிய பிறையாகிய கண்ணியை முடித்த சிவபெருமான் அடியவர்களை ஆட்கொண்டருளும் திறத்தின் திருஅருட் பெருமையினை எண்ணி எண்ணிப் பல முறையும் பணிந்து துதித்து; மேன்மை...வீற்றிருந்தார் - மேன்மை பொருந்த விளங்கும் திரு மாளிகையில் அரச மண்டபத்தினுள்ளே அரசு வீற்றிருந்தனர்.
(வி-ரை) வானவரம்பர் - சேர மன்னர்களின் மரபுப் பெயர்; “வான வரம்பனை நீயோ பெரும!Ó (புறநா-2). “பெருவான வரம்பனார்Ó (3904).
மறித்து ஏகி - பத்திரனார் விடைகொண்டபின் அந் நகர்ப்புறத்தினின்றும் மீண்டு சென்று.
அடிமை கொண்டருளும்...பெருமையினை நினைந்து - சோமசுந்தரக் கடவுள் பத்திரனார் பொருட்டுத் தமக்குத் திருமுகங் கொடுத்தருளிய செய்தியினை எண்ணி எண்ணி என்க. அடிமை கொண்டருளும் - பெருமையாவது திருமுகங் கொடுத்தது பத்திரனாருக்கு நிதியம் தருவதற்கு மன்று; தமது நிதியம் வேண்டியபடியுமன்று; என்னை? அவர் தாமே உலவாக்கிழியும் உலவாக்கோட்டையும் அருளிய திருவிளையாட்டுடையார்; உலக மெல்லாம் தாமே உடைய பெருஞ்சித்தர் ஆதலின் என்க; ஆயின் பின் என்னையோ? எனின், பத்திரனார் மூலம் தம்மை ஆட்கொண்டருள வைத்த கருணையின் பெருமையே என்பதாம்.
நினைந்து - எண்ணி எண்ணி; மண்டபம் - அரசர் கொலு வீற்றிருந்து அரசு புரியும் அத்தாணி மண்டபம்.
அரசு வீற்றிருந்தலாவது - அரசகாரியம் பார்த்தல்.