பாடல் எண் :3787

அளவில் பெருமை யகிலயோ னிகளுங் கழறிற் றறிந்தவற்றின்
உளமன் னியமெய் யுறுதுயர மொன்று மொழியா வகையகற்றிக்
களவு கொலைகண் முதலான கடிந்து கழறிற் றறிவார்தாம்
வளவர் பெருமா னுடன் செழியர் மகிழுங் கலப்பில் வைகுநாள்,
40
(இ-ள்) அளவில்.....வகை அகற்றி - அளவில்லாத பெருமையுடைய எல்லா யோனிகளில் வந்த உயிர்களும் சொல்வனவற்றை யெல்லாம் அறிந்து அவற்றின் மனத்தில் உள்ள மெய்யுறும் துன்பங்கள் ஒன்றும் ஒழியாதபடி நீக்கி; களவு....கடிந்து - களவும் கொலைகளும் முதலாகிய தீமைகளைக் கடிந்து; கழறிற்றறிவார்தாம்....வைகும்நாள் - கழறிற் றறிவாராகிய இந்நாயனார் சோழ மன்னருடனே பாண்டிய மன்னரும் கூடி மகிழும்படியாகிய கூட்டத்துடனே வாழும்நாளில்,
(வி-ரை) அளவில்.....அறிந்து - இஃது அரசு ஏற்றருளும்போது இறைவர்பால் இவர் வேண்டிப் பெற்ற வரத்தாலாகியது. “யாவும் யாருங் கழறினவு மறியு முணர்வும்Ó (3761) இதனைத் தம் கோலின் கீழ் வாழும் எல்லாவுயிர்களின் துன்பங்களையும் அறிந்து போக்கும் பொருட்டே இவர் வேண்டிப் பெற்றனர். முன் உரைத்தவை பார்க்க. அவற்றின்...அகற்றி - இவ்வரம் பெற்ற கருத்தினைத் தம் அரசாட்சியிற் கொண்டு செலுத்தினார் என்பதாம். இந்நாளின் நாகரீக உலக அரசாங்கம் என்று தம்மைச் சொல்லிக்கொண்டு பெருமிதம் பேசும் உலகர் இதனை உயத்துணர்ந்து தமது கீழான நிலையினை உணர்ந்து ஒழுகுவார்களாயின் உலகம் நலம் பெறும். ஒன்றும் - ஒழியாவகை - உம்மை முற்றும்மை. “உள்ளத்துறு தூய ரொன்றொழியா வண்ணமெல்லாந், தெள்ளுங்கழல்Ó (திருவாசகம்) என்றபடி இத்தன்மை இறைவரருள் தர வருவதன்றி மனித்தராலியல்வதன்று; இதுவே இறைமைத் தன்மையாம்.
களவு கொலைகள் முதலான கடிந்து - இது மக்கட் கூட்டத்தின் காவல் குறித்தது; “மாநிலங்கா வலனாவான்......அறங்காப்பா னல்லனோ?Ó (121) என்றதும், “இனிதுண்டு தீங்கின்றிÓ (695) என்றதும், பிறவும் காண்க,
கழறிற்றறிவார் தாம் - பெயர் போந்த காரணத்துக்கேற்ப அரசு செய்தனர் என்பது.
மகிழும் கலப்பில் - தமிழ் மூவேந்தர்களுள் ஏனை இருவருடன் நட்புடையராய் இகலின்றி வாழ்ந்தனர். புறப்பகை யின்மை குறிப்பு. முன்னர் “முக்கோக்களாய் நீதி மனுநூ னெறிநடத்தி, அகத்தும் புறத்தும் பகையறுத்துÓ (3769) என்றது காண்க; கலப்பு - நட்புரிமைக் கூட்டம். பின்னர் இந்நாயனார் நம்பிகளுடன் பாண்டிநாடு சென்று மீளும் சரித வரலாறும் காண்க. 3842 முதலியவை பார்க்க.