வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத் தூநற் சிறப்பி னர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள் தேனக் கலர்ந்த கொன்றையினா ராடற் சிலம்பி னொலிமுன்போன் மானப் பூசை முடிவின்கட் கேளா தொழிய மதிமயங்கி, | 41 | (இ-ள்) வானக் கங்கை...தமக்கொரு நாள் - ஆகாய கங்கையாறு தங்கிய சடையினையுடைய இறைவரது வழிபாடாகிய தூய நல்ல சிறந்த அருச்சனை யாகிய திருத்தொண்டு செய்து வருவாராகிய அவருக்கு ஒரு நாளில்; தேன் நக்கு அலர்ந்த - ஒலி - தேன் வழியும்படி மலர்ந்த கொன்றைமாலை சூடிய இறைவரது ஆடலின் சிலம்பொலியானது; முன் போல....மதிமயங்கி - பெருமையுடைய பூசையின் முடிவிலே முன்பு போலக் கேளாதொழியக் கண்டு மனம் மயங்கி, (வி-ரை) வழிபாட்டுத் தொண்டு புரிவார் தமக்கு - வழிபாடு செய்கின்ற வகையால் உரிய பலவாற்றாலும் தொண்டுகளைச் செய்யுமிவருக்கு; இவை முன்னர் விதிக்கப்பட்டன (3771); வழிபாடு - இச்சொல் இன்றும் மலைநாட்டின் கோயில்களில் வழக்கிலிருக்கின்றது; தமக்குக் - கேளாதொழிய என்று கூட்டுக. ஆடற்சிலம்பின் ஒலி - இறைவரது அருட்கூத்தின் காற்சிலம்பின் ஒலி; முன் போல் - முன் (3771) கூறப்பட்டதுபோல; ஆடற் சிலம்பின் ஒலி - ஆடுதலால் சிலம்பின் எழும் ஒலி. பூசை ஏற்றருளிய பொருள் பற்றியதாதலின் ஒலி என்றார். தேன்நக்கு அலர்ந்த கொன்றை - நகுதலால் தேன் அலர்ந்த; நகுதல் - விரிதல்; தேன் அலர்தல் - தேன் துளித்தல்; “தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார்Ó (2627). மதிமயங்கி - மயங்குதற்குக் காரணம் மேற்பாட்டிற் கூறுவார். இறைவரது திருவருள் பெறவில்லை எனில், அதற்குத் தன்மேல் நின்ற குறைபாடு காரணம் என்று எண்ணித் திருந்த நினைப்பது பெரியோர் தன்மை. “உன்னா லொன்றுங் குறைவில்லைÓ (திருவா) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. |
|
|