பாடல் எண் :3792

“என்னே! யடியார்க் கிவரருளுங் கருணை யிருந்த வாÓறென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய் புலியூர்ப் பொன்னம் பலமிறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர் தமையுங் காண்பÓ னெனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார் நாமச் சேரர் கோமானார்.
45
(இ-ள்) என்னே....என்று - இவ்விறைவர் அடியார்களுக்கு அருள் செய்யும் கருணைத் திறம் இருந்தவாறுதான் என்னே? என்று அதிசயித்து; பொன்நேர்..என விரும்பி - பொன்போன்ற சடையினையுடைய கூத்தனார் திருநடஞ் செய்கின்ற பெரும்பற்றப்புலியூரில் சென்று பொன்னம்பலத்தினை வணங்கித், தமக்கு எவரும் ஒப்பில்லாதவராகிய வன்றொண்டரையும் கண்டு வணங்குவேன் என்று விருப்பங்கொண்டு; நன்னீர்....கோமானார் - நல்ல நீர்நாடு எனப்படும் சோழ நாட்டிற்கு எழுந்தருளப் பெரிய சேர மன்னராகிய நாயனார் மனங்கொண்டனர்.
(வி-ரை) “என்னே ...இருந்தவாறுÓ என்று - இஃது இறைவர் முன் கூறியபடி அசரீரி மொழியால் அருளிய மொழி கேட்டு அரசர் துணிந்த மெய்மை.
புலியூர்ப் பொன்னம்பலம் - புலியூர் - பெரும்பற்றப்புலியூர் - சிதம்பரம்; புலியூரின்கண் உள்ள பொன்மன்றம்; பொன்னம்பலம் எங்கும் உள்ளது என்பது நூற்றுணியு; ஆதலின் இங்கு நாயனார் காண விரும்பியது புலியூரின்கண் உள்ள அதனை என்பார் இவ்வாறு கூறினார். என்னை? அங்குத் தமது ஆடலை வணங்கி நம்பிகள் பாடியதனைக் கேட்டருளி இறைவர் இங்கு வரத் தாழ்த்தோம் என்றருளினா ராதலின் அதனைச் சென்று தாமும் காண விரும்பினர் என்பதாம். நாயனார் இங்கிருந்தவாறே அங்குச் செல்லாமலே யோக நிலையில், வழிபாட்டின் முடிவில், திருச் சிலம்பொலி நாடோறும் கேட்டு வந்தாராயினும் அப் பெருமானே நாடோறும் சிலம்பொலி கேட்பித்தா ராதலானும் இப்போது இவ்வருட் பெருமையினை ஒட்டிக் கண்டு வணங்க விரும்பினர் என்பதுமாம்.
தன் நேர் இல்லா வன்றொண்டர் தமையும் காண்பன் - தமையும் - அருட் கூத்தரது பொன்னம்பலத்தினைக் கண்டு வணங்குதலே யன்றி, அவரையும் என்க; தன் நேரில்லா - தமக்கு ஒப்பில்லாத; “தனக் குவமை யில்லாதான்Ó (குறள்) எனப்படும் இறைவரைப் போலவே அவரால் ஆட்கொள்ளப்பட்ட தோழராகிய நம்பிகளும் ஆவர் என்பது. தமது பாட்டைக் கேட்டதனாலே இறைவரை இங்கு வரத்தாழ்த்தோம் என்று சொல்லுமாறு செய்ய வல்ல பெருமை யுடைமையும் குறிப்பு. நம்பிகளை நினைப்பித்தல் இறைவரது திருவுள்ளக் குறிப்பாக (3791) நின்றதாதலின் சேரனார்பால் இந் நினைவும் உடனே போந்த தென்க.
நீர்நாடு - காவிரி நாடு - சோழநாடு, நாமம் - பெருமை; புகழ் என்றலுமாம்.