பாடல் எண் :3793

பொன்னார் மௌலிச் சேரலனார் போற்று மமைச்சர்க் கஃதியம்பி
நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுக வென்று நலஞ்சாற்ற,
மின்னா ரயில்வேற் குலமறவர் வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளா ரடையநிரந் தணைந்தார் வஞ்சி யகநகர்வாய்.
46
(இ-ள்) பொன்னார் ....இயம்பி - பொன்னாற் செய்த மகுடந் தாங்கிய சேரனார் போற்றும் அமைச்சர்களுக்கு அவ் விருப்பத்தினைச் சொல்லி; நன்னாட்கொண்டு......நலம் சாற்ற - நல்ல நாளினை மேற்கொண்டு பயணம் புறப்படச் செய்க என்று நன்மையான ஆணையினைச் செய்ய; மின்னார் ....அகநகர்வாய் - ஒளியுடைய கூரிய வேல்களை ஏந்திய வீரர்களும், வெற்றி பொருந்திய வில் வீரர்களும், மற்றும் அந்நாட்டுள்ளார்களும் நெருங்க வஞ்சியின் அகநகரிலே கூடி அணைந்தனர்.
(வி-ரை) போற்றும் அமைச்சர் - தமது அரச காரியங்களை வழுவாமற் காக்கும் உரிமைப்பாடுடைய அமைச்சர்; போற்றுதல் - காத்தல்; இங்கு அரசியல் நெறியைக் காத்தலைக் குறித்தது. அரசர் இங்குத் தமது நாட்டினைக் கடந்து பிறிதொரு அரசரது (சோழர்) நாடு புகுகின்றமையின் அரசாங்க முறையில் அதற்காவனவும், அரசரது பயணத்துக்காவனவும் அமைச்சர்களே தெரிந்து செய்தற்குரியார்; அன்றியும், அரசர் அவ்வாறு பிற அரசரது நாடு சென்று மீண்டும் வரும்வரையில் இடைப் பட்ட காலத்தில் இந் நாட்டின் அரசியற் காவற் காரியம் நடைபெறுதற்கு வேண்டுவனவும் அமைச்சர்களே தெரிந்து செய்தற்குரியார்; இவற்றை யெல்லாம் மனங்கொண்டு அரசர் தாம் விரும்பிய நிலையினை அமைச்சர்க் கியம்பினர் என்பதாம். ஆசிரியரும் ஓர் அமைச்சராதலின் இத்திறம் தெரித்துச் செப்பினர் என்பதுமாம்.
நன்னாட்கொண்டு பெரும் பயணம் எழுக! என்று நலம் சாற்ற - பயணங்கள் நன்னாளில் தொடங்கத்தக்கன என்பது நமது நாட்டில் ஆன்றோர்களின் பண்டை வழக்கு ; அவ் வழக்கு நற்பயனும் தந்தது; ஆயின் இந்நாளில் மக்கள் அதனைக் கை நழுவ விடுவாராயினர்; பயனும் அற்றே யாய் நழுவி வருதல் காணலாம்; பெரும் பயணம் - நீண்ட தூரமும் நீண்ட நாட்களும் கொண்ட பயணம். இறைவழிபாடும் குருவழிபாடுமாகக் குறித்த பயனாலும் பெரிதென்க, ஏனைப் பயணங்கள் எவையும் சிறுமையுடையனவேயாம் என்பது.
நலம் சாற்ற - நல்ல ஆணை செய்ய.
வேல் - மறவர் - சிலை வீரர் - வேல் வீரர்களும் வில் வீரர்களும்; குலமறவர் - குலம் - சிறப்புக் குறித்தது; குலமகன் - குலமகள் - குலநகர் என்பன போல; குலம் மரபு குறித்த தெனக் கொண்டு மறவர் மரபினர் என்றுரைத்தலுமாம்; “குலவேடர்Ó (2916); குலத்தளவில் மறவர் என்பதேயன்றிக் குணத்தால் அறவரேயாம் என்பதும் குறிப்பு; என்னை? இவர்கள் பின்பு தமது உடல் வீழ்த்துச் சேரனாரைச் சாரக் கயிலை சென்று சேவகமேற்கும் கூட்டத்தவராதலின் என்க. நாட்டுள்ளார் - நாட்டுக் குடிமக்களுட் டலைசிறந்தோர்; மறவரும், வீரரும், உள்ளாரும் என உம்மை விரிக்க. அந்நாட்டுள்ள மறவரும் வீரரும் என்றலுமாம்.
வஞ்சி - கொடுங் கோளூர்; வஞ்சி என்பது பற்றி இந்நாளில் ஆராய்ச்சியிற் புலவர்க்குட் பெரும் இகல் விளைந்துள்ளது. ஆசிரியர் கருத்து இதனால் விளங்கும்; சிலப்பதிகாரத்துள்ளும் வஞ்சிக் காண்டம் என்பதும் இதனை வலியுறுத்தும். இங்ஙன மிருப்பவும் பூசல் விளைந்தமை வருந்தத் தக்கது.
அமைச்சர் தமக்கியம்பி - அமைச்சர்க் கீதியம்பி - என்பனவும் பாடங்கள்.