பாடல் எண் :3794

இட்ட நன்னா ளோரையினி லிறைவர் திருவஞ் சைக்களத்து
மட்டு விரிபூங் கொன்றையினார் தம்மை வலங்கொண் டிறைஞ்சிப் போய்ப்
பட்ட நுதல்வெங் களியானைப் பிடர்மேற் கொண்டு பனிமதியந்
தொட்ட கொடிமா ளிகைமூதூர் கடந்தா ருதியர் தோன்றலார்.
47
(இ-ள்) இட்ட நன்னாள் ஓரையினில் - குறித்த நல்ல நாளில் நல்ல வேளையிலே; இறைவர்....போய் - தமது இறைவராகிய திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளி யுள்ள மணமுடன் விரியும் கொன்றைப் பூக்களைச் சூடிய பெருமானாரை வலமாகச் சுற்றி வணங்கிப் போய்; பட்டம்...மேற் கொண்டு - பட்டத்தை யணிந்த நெற்றியினையுடைய யானையின் கழுத்தினை ஏறி; பனிமதியம்....தோன்றலார் - குளிர்ந்த சந்திரன் தீண்டும் கொடிகளையுடைய மாளிகைகள் நிறைந்த பழய வூராகிய கொடுங்கோளூரினைச் சேரர்பெருமானார் கடந்து சென்றனர்.
(வி-ரை) இட்ட நன்னாள் ஓரையினில் - இட்ட - குறித்த; கணிதநூல் வல்லோர் அளவிட்டுச் சொல்லிய இடமாகிய; இறைவர்க்குகந்த என்றுரைக்கவும் நின்றது. இறைவர்க்கு உவப்பாவது இன்ன நன்னாட் கொண்டு இன்ன நற்செயல் செய்க என்று திருவுளங் கொண்டு விதித்தல்; “ஆதிரை நாளாகந் தானும்Ó (தேவா); நல்ல என்பதனை ஓரையினுடனும் கூட்டுக. ஓரை - வேளை; முகூர்த்தம் - இலக்கினம் என்பர் . பயணத்துக்கு இட்ட நாட்களைப் பற்றி “ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறு முடனாய நாள்க ளவைதா, மன்பொடு நல்லÓ (தேவா) என்று ஆளுடைய பிள்ளையார் அருளிய திருவாக்கு ஈண்டு நினைவு கூர்தற்பாலது; சோதிட நூற்படி கணித்துக் காரியஞ் செய்யும் நிலைகள் இன்றும் மலைநாட்டு ஒழுக்கத்தில் மிக்கிருப்பதனைக் காணலாம். கொன்றை - இங்குத் தலமரமுமாம்.
இறைவர் - தமது மரபின் ஆன்ம நாயகராகக் கொண்டு வழிபட்ட ஆளுடைய பெருமான் என்பது. இவ்வாறு பயணம் முதலாகிய சிறப்புச் காரியங்கள் செய்யப் புகுமுன் தம்மை உடைய இறைவரை வணங்கிப் புகுதல் நல்ல ஒழுக்கம்.
யானைப் பிடர்மேற் கொண்டு - இது மலை நாட்டு அரசர் வழக்கு, “யானை யெருத்தம் பொலியÓ (நாலடி).
மதியம் தொட்ட கொடி - சந்திர மண்டலம் வரை உயரத் தூக்கிய கொடிகள் என்று அவற்றின் உயர்ச்சி குறித்தது. சந்திர மண்டலத்தைத் தொட்ட என்றும், சந்திரனால் தொடப்பட்ட என்றும் உரைக்க நின்றது. தொட்ட - தோண்டிய - என்று கொண்டு கொடி நிரையினை ஊடுருவிச் சென்ற என்ற குறிப்புமாம்; “வெண்மதியஞ் சோலைதொறு நுழைந்துÓ (1906) என்ற கருத்துக் காண்க.
மூதூர் - அரசர் தலைநகராகிய கொடுங்கோளூர்; பழமையாவது - “திரு வஞ்சைக் களமு நிலவிச் சேரர்குலக், கோவீற் றிருந்து முறைபுரியுங் குலக்கோ மூதூர்Ó (3748) என முன்னர்க் கூறப்பட்ட பெருமை; அரசுகள் திருவாக்கிற் “கொடுங்கோளூ ரஞ்சைக்களம்Ó என்று போற்றப்பட்ட பழமையும் காண்க.