யானை யணிகள் பரந்துவழி யெங்கு நிரந்து செல்லுவன மான மலைநாட் டினின்மலிந்த மலைக ளுடன்போ துவபோன்ற; சேனை வீரர் புடைபரந்து செல்வ தங்கண் மலைசூழ்ந்த கான மடைய வுடன்படர்வ போலுங் காட்சி மேவினதால். | 48 | (இ-ள்) யானை..செல்லுவன - அணிவகுத்த யானைக் கூட்டங்கள் பரவி வழியெங்கும் செல்லுவன; மான....போதுவபோன்ற - பெரிய மலைநாட்டில் மலிந்த பொருள்களாகிய மலைகள் தமது மன்னருடனே செல்கின்றன போன்றன; சேனை......செல்வது - சேனை வீரர்கள் பக்கங்களிற் பரவிச் செல்லும் நிலை; அங்கண் ...காட்சி மேவினது -அந்நாட்டில் அம்மலைகளைச் சூழ்ந்த காடுகளெல்லாம் உடனே போகின்றன என்பது போன்ற காட்சி பொருந்தியது; ஆல் - அசை. (வி-ரை) மலைகள் போதுவ - கானம் படர்வ - அரசரது பயணத்துடன் அணிவகுத்து யானைகள் செல்வது மலைகள் செல்வன போலவும், படை வீரர்கள் செல்வது மலை சூழ்ந்த காடு செல்வது போலவும் விளங்கின என்று உவமை கூறுமுகத்தால் அரசரது பயணச் சிறப்பும், படைச்சிறப்பும் உடன் கூறியவாறு, வினையும் உருவும்பற்றி வந்த தொடர் உவமம். யானை அணிகளைச் சூழ்ந்து படைவீரர்களின் அணி அமைப்பு மலையைச் சூழ்ந்த கானம் போல என்பது உவமப்பொரு ளிரண்டற்கும் தொடர்புபடுத்தியவாறு. கைமலை என்பது யானைக்கு வழங்குவதும் காண்க. மலைகள்- கானம் - யானைகள் மலைகளைப் போன்றன; வீரர்படை அந்த மலைகளைச் சூழ்ந்த கானம் போன்றன என்று படைகளின் சிறப்பும் உடன் கூறியவாறு. மலைகள் உடன் போதுவ - கானம் உடன் படர்வ - இவ்வரசர் யாவும் யாருங் கழறினவற்றை யறிந்து அவற்றின் உளமன்னிய துயர மொன்று மொழியாவகை யகற்றிக் காத்தலின் உயிர்வருக்கங்களுள் அறிவு பெற்றவை எல்லாம் அவர்பால் அன்பு கொண்ட உடன்போதுதல் சாலும்; ஆயின் அறிவுமிக்கில்லாத மலையும் அறிவு முதிர்ச்சி யில்லாத கானமும் உடன் போதுவ என்பதென்னை? எனின், இதனால் அவரது குடைநிழற் காவலின் சிறப்புக் குறித்தபடி என்க. அவரது அறத்தின் வழி நின்ற அரசகாவலின் ஆணை மலையினும் அவை சூழ்ந்த கானத்தினும் சென்று நிகழ்ந்தது என்பதும் குறிப்பு. அந்நாட்டு மலைகள் நெருங்கிய கானங்களாற் சூழப்பட்டன, என்று நாட்டு வளமு முடன்கூறியவாறு “மலைசூழ்ந்தÓ என்ற கருத்துமிது. யானைப் படையும் சேனை வீரரும் அரசரை வழியனுப்ப உடன் சென்றனர் என்பதாம். இப்பாட்டுத் தற்குறிப்பேற்ற அணி. அடைய - முழுதும் - எல்லாம். மலைகள் - கானம் - மலைநாட்டில் பரசுராமர் தமது வரத்தினால் கடலைப் புடைபெயர்த்து, நிலங்கண்டு, நாடாக்கி வயல்கள் திருத்துமுன், இருந்தவை குறிஞ்சியும் முல்லையும் நெய்தலுமேயாம். இங்கு அவற்றுள் முன்னைய இரண்டன் பொருளுங் கூறி, ஏனை நெய்தலினை மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க. போவன - என்பதும் பாடம். |
|
|