புரவித் திரள்க ளாயோகப் பொலிவி லசைவிற் போதுவன அரவச் சேனைக் கடற்றரங்க மடுத்து மேன்மே லடர்வனபோல் விரவிப் பரந்து சென்றனவான்; மிசையு மவலு மொன்றாக நிரவிப் பரந்த நெடுஞ்சேனை நேமி நெளியச் சென்றனவால். | 49 | (இ-ள்) புரவி ....போதுவன - குதிரைப் பந்திகள் கரையில் சேரும் விளக்கம் போல அசைவுடன் செல்பவை; அரவச் சேனை .....சென்றனவால் - சத்திக்கின்ற சேனையாகிய கடலின் அலைகள் மேன்மேல் வந்து தாக்குவன போலப் பொருந்திப் பரவிச் சென்றன; மிசையும்....சென்றனவால் - மேடும் பள்ளமும் ஒன்றாக அவ்வாறு நிரல்படப் பரவிய பெருஞ்சேனை பூமி நெளியும்படி சென்றன. (வி-ரை) ஆயோகப் பொலிவு - கரையிற் சேர்வன போன்ற காட்சி; ஆயோகம் - கரை. ஆயோகப் பொலிவின் அசைவில் - கரை சேர்கின்ற தோற்றம் போன்ற அசைவுடனே. சேனைக் கடற்றரங்கம் - சேனையின் பரப்புக் கடல் போன்ற தென்றும், அதன் அலைகள் கரையிற் சேரும்போது உயர்ந்து பரவி மேன்மேல் நிரவிச் செல்வன போலக் குதிரைப் பந்திகள் மேன்மேற் பரந்து தலை நிமிர்ந்து பரந்து சென்றன என்றும் உவமிக்கப்பட்டன. இக்காட்சி கடற்கரையில் அலைகள் மேன்மேல் உயர்ந்து மோதிப் பரவும் நிலையினை நேரிற் கண்டோர்க்கு நன்கு புலப்படும். அடர்வனபோற் - போதுவன(வாகிய) - புரவித்திரள் - சென்றன - என்று கூட்டி முடிக்க. இவ்வாறன்றி ஆயோதம் என்று பாடங்கொண்டு பாம்பின் கூட்டங்கள் என்றுரைப்பர் சுப்பராய நாயகர்; திரள்களாய் யோகப் பொலிவு - என்று பிரித்து யோகப் பொலிவு - நற்சுழி என்றுரைப்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை. மிசை - மேடு; அவல் - பள்ளம். “அங் கொருசூழ லவலோடு மடுப்பது கண்டுÓ (1058). “இரலை தெறிக்கப் பரல் அவல் அடையÓ (அகம்). மிசையும் அவலு மொன்றாக நிரவி - மேடும் பள்ளமும் ஒரு தன்மையனவாகவே தோன்றும்படி; ஒருதன்மைப்படுத்து என்றலுமாம்; நிரவி - நியமித்துப் பரப்பி; மலைநாட்டு வழியாதலின் மேடுபள்ளங்களுள்ளன என்பதாம். இந்நாளில் (tanks) இடாங்கிகள் என்னும் படைக் கருவிகளால் முன்னர் வழிநிரவிப் படைகள் செல்லும் நிலையைக் கருதுக. நேமி நெளிய - நேமி - பூமி, நெளிதல்- பக்குவிட்டு இளகி வளைதல். நெடுஞ் சேனை - சேனை வீரர்களின் கூட்டம் - வரிசை. ஆல் - இரண்டும் அசை. விரவிப் படர்ந்து - நிரவிப் படர்ந்த - என்பனவும் பாடங்கள். |
|
|