அந்நாட் டெல்லை கடந்தணைய வமைச்சர்க் கெல்லாம் விடையருளி, மின்னார் மணிப்பூண் மன்னவனார் வேண்டு வாரை யுடன்கொண்டு, கொன்னா ரயில்வேன் மறவர்பயில் கொங்கர் நாடு கடந்தருளிப் பொன்னாட் டவரு மணைந்தாடும் பொன்னி நீர்நாட் டிடைப்போவார், | 50 | (இ-ள்)அந்நாட்டெல்லை....அருளி - அந்த மலை நாட்டின் எல்லை கடந்து செல்ல அமைச்சர்களுக்கெல்லாம் விடை கொடுத்தருளி; மின்னார்....உடன் கொண்டு - ஒளி பொருந்திய மணியணிகளையுடைய சேரர் பெருமானார் தமது பயணத்தின் உதவிகளின் பொருட்டு வேண்டும் பரிசனங்களை மட்டில் உடன் அழைத்துக் கொண்டு; கொன்னார்....கடந்தருளி - அச்சமூட்டும் கூர்மையுடைய வேலேந்திய மறவர்கள் வாழ்கின்ற கொங்கு நாட்டினைக் கடந்து சென்றருளி; பொன்னாட் டவரும்....போவார் - தேவ வுலகத்தவர்களும் வந்து படிந்து ஆடும் காவிரி நீரின் வளத்தினையுடைய (சோழ) நாட்டினிடைப் போவாராகி, (வி-ரை) அந்நாட்டு,......விடையருளி - சேனையும் அமைச்சரும் தமது நாட்டின் எல்லைவரை வழியனுப்ப உடன் வந்தனராக, அவ்வெல்லை கடந்தபின் வேற்று நாட்டினுள் அவர் உடன் வருதல் தகாமையினாலும், வேண்டப்படாமையாலும் அங்கு அவர்களுக்கு விடைகொடுத்தனர் என்பதாம். வேண்டுவார் - தமது மெய்காவலுக்கும், பணிவிடைகளுக்கும் இன்றியமையாது வேண்டப்படுவார்; வேண்டுவார் - வேண்டப்படுவார், படுவிகுதி தொக்கு வந்த செயப்பாட்டு வினைப்பெயர். மறவர் - மறம் - வல்லமை; இங்குச் சாதிப் பெயரா யன்றி வலிமையுடையோர் என்ற காரணப் பெயராய் நின்றது; மறம் - அறத்தின் மாறுபட்டது என்ற குறிப்புடனும் நின்றது; “கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலைÓ (தேவா - நம்பி - அவிநாசி); முன், “மின்னா ரயில்வேற் குல மறவர்Ó (3793) என்றார். இங்குக் “கொன்னா ரயில்வேல்Ó என்ற குறிப்புமது. இந்நாளினும் இந்நாடு கொலை கொள்ளையாதி கொடுந்தொழில் பலவற்றுக்கும் மிகுதியும் நிலைக்களமாயிருப்பதும் காணப்படும். கொங்கர் - ஒருவகைச் சிற்றரச மரபினர். இவர்களால் ஆளப்பட்டமையின் இந்நாடு கொங்குநாடு எனப்பட்டது. கொங்கர்நாடு - சோழர் நாடு - சோழ நாடு என்பது போலக் கொங்கர்நாடு கொங்கநாடு என வழங்குவது; இந்நாட்டின் அரசர், வடக்கில் சோழர்நாட்டி னரசர்க்கும், தெற்கிலும் மேற்கிலும் சேரநாட்டி னரசர்க்கும் உட்படாமல் தனி அரசாட்சி செய்து வந்தனர் என்பது நாட்டுச் சரித வரலாறு; இந்நாட்டின் நாற்புற எல்லை அமைப்புக்களும், சூழ்ந்த குன்றுகளும், சில அமைப்பும் இவர்களது தனி யரசுக்குச் சாதகமா யிருந்ததென்பர்; சில காலங்களில் இவர்கள் சேர சோழர்களின் ஆட்சிக்குட்பட்டுத் திரை செலுத்தியும், அம்மரபினர்களால் இந்நாடு ஆளப்பட்டும், வந்ததென்பதும் சரிதத்தால் அறிகின்றோம். சேரமான் பெருமாள் நாயனார் அரசியற் காலத்தில் இவர்கள் தனியாட்சி செய்தனர் என்பது இதனாற் கருதப்படும். “அந்நாட்டெல்லைÓ என்றும், “மறவர் பயில் கொங்கர் நாடுÓ என்றும் கூறியது காண்க. பொன்னாட்டவர் - தேவ வுலகத்தவர்கள்; தேவர்கள் ; அவர்கள் பொன்னி அணைந்தாடுதல் காவிரிக்கரையில் தேவர்கள் பலரும் போந்து தவஞ் செய்து தாபித்து வழிபட்ட சிவன்பதிகள் பலவற்றாலும் அறியலாம். மயேந்திரப்பள்ளி, திருப்பிரமபுரம், திருச்சக்கரப்பள்ளி, திருக்கண்ணார் கோயில், திருப்பருதி நியமம், திருநள்ளாறு முதலியவற்றின் வரலாறுகள் காண்க; “புவனியிற் போய்ப்பிற வாமையினாணாம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கின்ற வாறுÓ (திருவா) என்ற திருவாக்கின் கருத்தும் காண்க. பொன்னாட்டவரும் - அணைந்து - ஆடும் பொன்னி - தேவருலகப் பொன்னினும் மிக்கது இந் நன்னீர்ப் பொன் என்றது குறிப்பு; முன்னையது வினையை ஆக்கிப் பிறப்பிற் கேதுவாகும்; இஃது அவ்வாறன்றி வினையைக் கழுவிப் பிறவியைப் போக்கும் என்பதாம். பொன்னி நீர் நாடு - பொன்னி நீரினால் வளம் செய்யப்பெறும் சோழ நாடு. போவார் - போவாராய்; முற்றெச்சம்; போவார் - செல்கின்றார் - (3798) எய்தி - ஏறிச் சென்றார் (3799) என்று மேல் வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடித்துக்கொள்க.கொங்கு நாடு - என்பதும் பாடம். |
|
|