சென்ற திசையிற் சிவனடியார் சிறப்பி னோடு மெதிர்கொள்ளக் குன்றுங் கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத் துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்து வென்றி விடையா ரிடம்பலவு மேவிப் பணிந்து செல்கின்றார். | 51 | (இ-ள்) சென்ற....எதிர்கொள்ள - போயின திசையில் எங்கும் சிவனடியார்கள் வந்து எதிர்கொள்ள; குன்றும்....குறைவறுப்ப - குன்றுகளையும் காடுகளையும் தம் இடமாகக் கொண்டு ஆளும் குறுநில மன்னர்கள் அவ்வவரிடங்கள் தோறும் தமக்கு வேண்டும் குறைகளை யெல்லாம் நிரப்பி உபசரிக்க; துன்றும்...பல கடந்து - பரல்கள் நெருங்கிய பாலை நிலங்களும் காட்டாறுகளும் துன்பம் தரும் கற்கள் நிரம்பிய கல் அதர்களும் ஆகிய இவை பலவற்றையும் கடந்து சென்று; வென்றி...செல்கின்றார் - வெற்றி பொருந்திய இடபத்தையுடைய இறைவர் வெளிப்பட எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் சென்று பணிந்து போகின்றாராய், (வி-ரை) சென்ற......எதிர் கொள்ள - சென்றதிசை - “புலியூர்ப் பொன்னம்பலம் இறைஞ்சி - வன்றொண்டரையும் காண்பன்Ó (3792) என்று விரும்பி அத்திசையினை நோக்கியே எழுந்தருளினாராதலின் சென்ற திசை என்று ஒருமையிற் கூறினார். சிவனடியார்......எதிர்கொள்ள - மன்னர் என்ற நிலையினன்றிப் பேரடியார் எனக் கண்டு சிவனடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள என்க. குறும்பர் - குறு நில ஆட்சியுடைய சிறு மன்னர்கள். குறும்பு - ஆறலைத்தல் முதலியவை எனக்கொண்டு, வேடர்கள் என்பாருமுண்டு, குன்றும் கானும் உடைக் குறும்பர் - குன்றுகளையும் கானங்களையும் தமக்கு உரிய வாழ்விடமாகக் கொண்டு அங்கங்கும் ஆட்சி புரியும் அவ்வத் தலைவர்கள்; பொத்தப்பி நாட்டில் உடுப்பூரில் வேடர் தலைவனான நாகனது தலைமையினை “உங்கள் வரையாட்சிÓ என்பதும், அவ்வாறு வரும் பிறவும் காண்க; உடை - இவ்விடங்களைத் தம் உடைமையாக் கொண்டவர்; வேறு அரசர் முதலிய எவருடைய ஆட்சியும் செயலும் இங்குச் செல்லா என்பது ; உருஷியா நாட்டு மலைகளும், தென் ஆப்பிரிக்கா நாட்டுக் காடுகளும், பிறவும் அங்கங்கு வாழும் தலைவர்க்கு ஒப்பற்ற அரண்களாய் விளங்குதல் இந்நாட் பெரும்போர்களிலும் கண்ட உண்மை; குறும்பர் - குறுநிலங்களாகிய தமது எல்லை யளவில் அமைவர்; குறும்பு - இவர்களது தொழில்களாகிய ஆறலைத்தல் அயற்புலங் கவர்தல் முதலிய சிறு குற்றங்கள் என்ற குறிப்பும் பெறக்கூரிய கவிநயம் கண்டுகொள்க. “ஆறலைத் துண்ணும் வேட ரயற்புலங் கவர்ந்து கொண்டÓ (655). இடங்கள் தோறும் - இத்தகைய இடங்கள் பற்பலவற்றையும் இடையிற் கடந்து சென்ற நிலை குறித்தது. குறைவறுப்ப - பயண உதவிக்கு வேண்டிய பொருள்களாலும் செயல்களாலும் குறைவு நேராமற் செய்ய; “பாண்டிமா தேவி யார்மெய்க் குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்லÓ (2789). துன்று முரம்பு - துன்றுதல் - செறிதல்; இங்குப் பரல் செறிதல் குறித்தது; முரம்பு - பாலை நிலம்; மேட்டு நிலங்கள் என்றலுமாம்; துறு கற்சுரம் - துறு - செல்லுதற்கியலாதபடி வருத்தம் விளைக்கும்; கற்சுரம் - கற்கள் மிகுதியாக உடைய காடுகள். கல்லாங்காடு என்பர்; பல - இவை பற்பலவும் இடையிட்டிருந்தன என்பது. வென்றி விடையார் இடம்பலவும் மேவி - இப்பதிகள் நாயனார் செல்லும் வழியில் இடையிட்டவை. இவை ஆளுடைய பிள்ளையார் - ஆளுடைய அரசுகள் - ஆளுடைய நம்பிகள் சரிதங்களால் அறியக் கிடத்தலின் இங்கு விரித்துக் கூறா தமைந்தார்; திருப்பைஞ்ஞீலியி னின்றும் ஆளுடைய பிள்ளையாரும், திருவீங்கோய் மலையினின்றும் ஆளுடைய நம்பிகளும் காவிரியைக் கடந்து அதன் தென்கரையால் கொங்கினிடை எழுந்தருளினர். இங்குக் கூறிய இடம்பல என்றவை பொன்னித்தென் கரையிற் சாரும் அளவும் கொங்கு நாட்டில் உள்ள திருக்கொடுமுடி - திருக் கருவூ ரானிலை - முதலாயின என்பது கருதப்படும். காவிரித் தென்கரை சேர்ந்து வடகரை ஏறிச் சென்ற நிலைகளை மேல்வரும் பாட்டிற் கூறுவார். பணிந்து செல்கின்றார் - தில்லையினைக் குறித்துச் சென்றாராயினும் இடைப்பட்ட பதிகளிலும் வணங்கிச் செல்லும் மரபு பற்றி வணங்கினர்; செல்கின்றார் - நிகழ்காலம், வழிச் செலவு ஆர்வமேலீட்டினால் இடையீடின்றி நிகழ்ந்து செல்லும் நிலை குறித்தது. |
|
|