பொருவில் பொன்னித் திருந்தியின் கரைவந் தெய்திப் புனிதநீர் மருவுந் தீர்த்த மகிழ்ந்தாடி மருங்கு வடபாற் கரையேறிக் திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச் செம்பொன் மன்று ணடம்போற்ற உருகு மனத்தி னுடன்சென்றா ரொழியா வன்பின் வழிவந்தார். | 52 | (இ-ள்) பொருவில்....மகிழ்ந்தாடி - ஒப்பற்ற காவிரித் திருநதியின் தென்கரையில்வந்து சேர்ந்து பக்கத்தில் வடபாலின் கரையினில் ஏறித் தூய நீர் பொருந்திய அத்தீர்த்தத்தில் மகிழ்ந்து குளித்து; ஒழியா அன்பின் வழி வந்தார் - நீங்காத அன்பின் வழியிலே வந்தவராகிய அம் மன்னவனார்; திருப்புலியூர்...உடன் சென்றார் - திருப்பெரும்பற்றப்புலியூரில் செம்பொன்னம்பலத்தில் ஆடுகின்ற திருக்கூத்தினைப் போற்றும் பொருட்டு உருகுகின்ற மனத்தினுடனே சென்றருளினர். (வி-ரை) பொன்னித் திருநதியின் கரைவந்தெய்தி - இது சோழ நாட்டின் காவிரித் தென்கரை; மருங்கு வடபாற் கரை ஏறி என்றதனால் நாயனார் காவிரியின் தென்கரை வழியே சென்று தில்லையின் அணித்தாக அதனைக் கடந்து வடகரை ஏறினர் என்பது கருதப்படும். புனித நீர் மருவும் தீர்த்தம் - என்றதனால், நீர் என்பவை யெல்லாம் தீர்த்த மாகா; அவற்றுள் இறை நிறைவுடைய திருமேனியாக எண்ணுதலால் புறமும் உள்ளும் புனிதம் செய்வனவே தீர்த்தம் எனப்படும் என்றறிவித்த நிலை கண்டுகொள்க புலியூர்க் செம்பொன் மன்றுள் நடம்போற்ற - இந் நாயனார் நித்தமும் நடம் போற்றிச் சிலம்பொலி கேட்பவராதலின் இங்கு அதனைப் புலியூர் மன்றினுள்ளே கண்டு போற்ற வந்தனர். இடத்தின் வேறுபாடே யன்றி மற்றில்லை என்பதாம். ஒழியா அன்பின் வழி வந்தார் - வழி - இடையறாத அன்பினாலே இத்துணை தூரமும் வழி நடந்து என்றும், ஒழியா அன்பின் வழி -இடையறாப் பேரன்பு பூண்ட வழி - மரபு பிறழாது என்றும் உரைக்க நின்றது திருவிற் பொலியும் திருப்புலியூர் - “உலகுக் கெல்லாம், திருவுடை யந்தணர் வாழ்கின்ற தில்லைÓ (தேவா - அரசு), “செல்வர் வாழ்தில்லைÓ (தேவா -பிள்); என்பவை முதலியன காண்க; திரு - சிவச் செல்வம்; மருங்கு வடபாற்கரை ஏறி - நாயனார் சென்ற வழி, கொடுங்கோளூரி னின்றும் வடகிழக்கு நோக்கிக் செல்லும் கற்சாலைவழியே பொள்ளாச்சி, தாராபுரம், கரூர், வழியாகக் காவிரித் தென்கரையில் திருச்சிராப்பள்ளியை அடைந்து, அங்குநின்றும் காவிரியைக் கடந்து லாலுகுடி - திருப்பழுவூர், இப்போது அறியப்படும் கங்கை கொண்ட சோழபுரம் வழியாய் வடக்கும் கிழக்குமாகச் செல்லும் சாலை என்பது கருதப்படும். கொள்ளிடத்தைக் கடந்தேறி என்னாது காவிரியைக் கடந்து என்றதனாலும், இதுவே தூரத்தாற் சுருக்கமாகிய வழியாதலாலும் இவ்வாறு கருதப்பட்டது. |
|
|