பாடல் எண் :3800

வந்து தில்லை மூதூரி னெல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழா மணைந்த போதி லெதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி யிறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ வெழுநிலைக்கோ புரத்தை யணைந்தார் சேரலனார்.
53
(இ-ள்) வந்து......வணங்கி - முன் கூறியவாறு அன்பின் வழியே வந்து தில்லையாகிய பழம்பதியின் எல்லையினைச் சேர்ந்த அதனை வணங்கி; மகிழ்ச்சியினால்....எதிர் வணங்கி - மகிழ்ச்சியினாலே எதிர்கொள்ளும்பொருட்டுத் தில்லைவாழந்தணர்களும் திருத்தொண்டர் கூட்டங்களும் வந்து அணைந்த போதில் அவர்களை எதிர் பணிந்து; சந்த .....இறைஞ்சி - திருநகரத்தினுள்ளே புகுந்து அழகிய மண முடைய பூக்களால் அணி செய்யப்பெற்ற திருவீதியினைப் பணிந்து; தலை மேல்...மகிழ - தலையின் மேலே கைகள் கூட மனம் களிப்ப; சேரலனார் - சேரமான் பெருமாள்; எழுநிலை....அணைந்தார் - எழுநிலைக் கோபுரத்தை அணைந்தருளினர்.
(வி-ரை) எல்லை - திருத்தில்லையின் நாற்புரமும் காத தூரத்தில் உள்ள திரு எல்லை என்னும் சிறப்பாகிய அமைப்பு. இதுபற்றி முன் உரைத்தவை பார்க்க.
அந்தணாளர்....எதிர் வணங்கி - அந்தணாளர் - தில்லைவாழந்தணர்கள்; இவர்களுக்குரிய தனிச் சிறப்புப் பற்றித் தொண்டர்குழாத்தின் முன்வைக்கப்பட்டனர். அணைந்த போதில் - அரசரை எதிர்கொள்ளும் பொருட்டு என்பது குறிப்பெச்சம். எதிர் வணங்கி - என்றதனால் அந்தணர்கள் தொண்டர்கள் வணங்கா முன் என்பது பெறப்பட்டது. 244 - 1484 - 2405 - முதலியவை பார்க்க.
திருவீதி - தில்லையின் திருவீதிச் சிறப்புப்பற்றி முன் உரைத்தவை யெல்லாங் கொள்க; “மாதவங்க ணல்குந் திருவீதி நான்குந் தொழுதுÓ (2053); “பொய்ப் பிறவிப் பிணியோட்டுந் திருவீதிÓ (1444)