பாடல் எண் :3801

நிலவும் பெருமை யெழுநிலைக்கோ புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங்கண்ணீர்த் துளிததும்பப்புகுந்து மணிமா ளிகைவலங்கொண்
டுலகு விளக்குந் திருப்பேரம் பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகி லண்ட மளித்தவர்நின் றாடுந் திருச்சிற் றம்பலமுன்.
54
(இ-ள்) நிலவும்......இறைஞ்சி - நிலவுகின்ற பெருமையினையுடைய எழுநிலைக் கோபுரத்தின் முன்பு நிலமுற விழுந்து வணங்கி; மலரும்......வலங்கொண்டு - மலர்கின்ற கண்களின் நீர்த்துளிகள் பெருக வுள்ளே புகுந்து திருமாளிகையினை வலமாக வந்து; உலகு....வணங்கி - உலகத்தை விளக்கம் செய்கின்ற திருப்பேரம்பலத்தை வணங்கி; அலகில்....திருச்சிற்றம்பல முன் - அளவில்லாத அண்டங்களை யெல்லாம் அளித்தருள்வாராகிய கூத்தப்பிரான் நின்று அற்புதக்கூத் தாடுகின்ற திருச்சிற்றம்பலத்தின் முன்னர்; உள்ளணைந்தார் - உள்ளே அணைந்தனர் (சேரலனார் ).
(வி-ரை) கோபுரத்தை அணைந்த சேரலனார் அதனை முறையால் வணங்கி, உட்புகுந்து முறைப்படி வழிபட்டுத் திருமுன்பு சேர்ந்த நிலையினைக் கூறுவது இத் திருப்பாட்டு.
நிலத்திறைஞ்சி - திருக்கோபுரத்தின் முன்னர் நிலமுற வீழ்ந்து வணங்குதல் வேண்டுமென்பது விதி.
மாளிகை - திருமாளிகை; இறைவரது திருக்கோயில் திருமதிலுக்குள் உள்ளிடம். திருமாளிகைப் பத்தி என்ற வழக்குக் காண்க.
உலகு விளக்கும் திருப்பேரம்பலம் - “பேரம்பலம் மேருÓ (250). பேரம் பலம் வேறு; சிற்றம்பலம் வேறு; தனி மன்றங்கள்.
அண்டம் அளித்தவர் - அண்டங்களை யெல்லாம் ஈன்று உயிர்களை அளிப்பவராகிய அம்பலவர்.
நின்றாடும் - நின்று அருட்கூத் தியற்றும்.