பாடல் எண் :3802

அளவி லின்பப் பெருங்கூத்த ராட வெடுத்த கழல்காட்ட
உளமும் புலமு மொருவழிச்சென் றுருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு தன்றி மன்றிற் கழல்வைத்து
வளருந் திருக்கூத் தமுதுலகுக் களித்த கருணை வழுத்தினார்.
55
(இ-ள்) அளவில்....கழல்காட்ட -அளவுபடாத இன்பந் தருகின்ற பெருங்கூத்தர் ஆடுதற்கெடுத்த திருவடியைக் காட்டியருள; உளமும்....உய்கின்றார் - உள்ளமும் புலன்களும் ஒரு படித்தாய்க் கூடி உருகியிடத் துதித்து உய்தி பெறுகின்றாராகி; களனில்...அமுதன்றி - கழுத்திலே விடத்தினை வைத்துத் தேவர்களுக்கு அளித்துக் காத்த அமுதமேயன்றி; மன்றில்..வழுத்தினார் - திருவம்பலத்திலே திருவடியினை வைத்து வளர்கின்ற திருக்கூத்தாகிய அமுதத்தினை உலகுக்கு அளித்தருளும் கருணைத் திறத்தினைப் போற்றினார்.
(வி-ரை) அளவில் இன்பப் பெருங்கூத்தர் - இங்குக் கூறியது இறைவரது பேரானந்தப் பெருங்கூத்தி னியல்பு; இஃது யோகியர்களும் ஞானியர்களும் கண்டு பயன் பெற்று அழுந்தி அனுபவித்து நிற்பது. உய்கின்றார் - என்பது காண்க.
ஆட எடுத்த கழல்காட்ட - தூக்கிய திருவடி; குஞ்சிதபாதம் என்பர். “முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடுÓ என்றபடி முத்திப் பேறளித்தற் கிலக்காகிய இடம்; காட்ட - காட்டக் காணும் உயிரின் இயல்பு குறித்தது.
உளமும் புலமும் ஒருவழிச் சென்றுருக - உளம் - மனமாதி - உட்கரணங்கள்; புலம் - சத்தமாதி புறக்கரணங்கள்; ஒருவழிச் செல்லுதல் - ஒன்றுதல்; “ஒன்றி யிருந்து நினைமின்கள்Ó (தேவா); “ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ளÓ (252); “பூண்டவைம் புலனிற் புலப்படா வின்பம்Ó (3244); “உணர்வினேர் பெறவரும் சிவபோகம்.....ஒழிவின்றி - ஐம்பொறி யளவினு மெளிவரÓ (2059); “கையுந் தலைமிசைÓ (1432).
களனில்....உலகுக்களித்த - இறைவர் அருளிய அமுது இரண்டு; விடத்தினைக் கழுத்தில் வைத்துத் தேவர்களுக்கு அளித்த அமுதம் ஒன்று; திருவம்பலத்திலே திருவடியினை ஊன்றி வைத்து உலகுக்கு அளித்த அருட்கூத்தாகிய அமுதம் மற்றொன்று; அவற்றுள் முன்னையது தேவர்களுக்கு ஒரு காலத்தில் அருளியது; அப்போதைக்கு அவர்கள் மரணந் தவிர்த்து ஆயுள் பெற்றாலும் இறப்பினைத் தவிர்ந்து எஞ்ஞான்றும் இறவாநிலை பெறவில்லை. அதுபோலன்றி, இங்கு உலகருக்கு அருளும் அருள் நடத்தின் அமுதம் எஞ்ஞான்றும் பிறவாத இறவாத நிலை தருவது என்ற இவைபோன்ற கருத்துக்கள் பலவும் பெறவைத்த கவிநயம் கண்டுகொள்க. வளரும் - எக்காலத்தும் நீடியிருக்கும். நித்தமாகிய. களன் - களம் - கழுத்து;
விடம் வைத்து - விடத்தினை மறைத்து வைத்து.
கழல் வைத்து - ஒரு திருவடியினை ஊன்றி; ஊன்றிய திருவடியே ஆடுகின்ற தூக்கிய திருவடியினால் வரும் முத்திப் பேற்றுக்கு ஆதாரமாய் நிற்றலின் கழல் வைத்து வளரும் திருக்கூத்து என்றார்; “ஊற்றமா, வூன்று மலர்ப்பதத்தே யுற்ற திரோதம்Ó என்றபடி ஊன்றிய திருவடி மறைப்புச் சத்தியைத் தந்து பின் அருட்சத்தி விளக்கத்துக் கேதுவாம்; இக்கருத்தினையே முன் கழுத்தில் வைத்து மறைத்த விடத்தினால் அமுதம் பெறக் காரணமாயிற்று என்று உவமையினை உள்ளுறுத்துக் கூறிய நயமும் கண்டுகொள்க. “களனில் விடம் வைத் துலகளித்த வமுதன்Ó என்பது பாடமாயின் தேவர்க்கு அமுதளித்த இறைவர் உலகர்க்கு அருட்கூத்தாகிய வளரமுத மளிக்கும்இறைவன் என்றுரைத்துக் கொள்க; “விடம்வைத் தவரளித்த வமுதமன்றில்Ó என்ற பாடமுமுண்டு,
கருணை - இறைவரது திருக்கூத்துக்கு முண்டு; உயிர்களின் மேல் வைத்த கருணையே காரணமாம் என்பது; “என்னே! யடியார்க் கிவரருளுங் கருணைÓ (3792) என முன்னரும் இக்கருத்தினையே பற்றிப் போற்றியது காண்க.