ஆரா வாசை யானந்தக் கடலுட் டிளைத்தே யமர்ந்தருளாற் சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருவந் தாதி திருப்படிக்கீழ்ப் பாரா தரிக்க வெடுத்தேத்திப் பணிந்தார், பருவமழை பொழியுங் காரா னிகர்க்க வரியகொடைக் கையார் கழறிற் றறிவார்தாம். | 56 | (இ-ள்) ஆரா.....அமர்ந்து - நிறைவெய்தாத ஆசை மிகுதியினாலே ஆனந்தமாகிய கடலினுள்ளே முழுகி அதனுள்ளே பட்டு விரும்பி யிருந்து; அருளால் - சிவன் றிருவருளினாலே; பருவ....தாம் - பருவந் தவறாது வேண்டிய மழையினை வரையாது பொழியும் மேகத்தினாலும் ஒப்பாதற்கரிய கொடையினைப் பொழியும் கையினை உடைய கழறிற் றறிவார் தாம்; சீரார்....பணிந்தார் - சிறப்பு நிறைந்த வண்ணத்தினையுடைய பொன்வண்ணத் திருவந்தாதியினை திருப்படியின் கீழே உலகம் அன்புடன் எத்தி இன்புறும்படி எடுத்துப் பாடித் துதித்துப் பணிந்தருளினார். (வி-ரை) ஆரா ஆசை - ஆரா - எத்தனை செலுத்தினும் நிறைவு பெறாத; ஆர்தல் - நிறைதல். ஆனந்தக்கடல் - ஆனந்த மிகுதியினைக் கடல் என் றுருவகித்தார்; கடல் என்ற தற்கேற்பத் திளைத்து என்றார்; திளைத்தல் - மூழ்கி யின்புறுதல், “ஆனந்த வெள்ளத் தழுந்துமோ ராருயிர்Ó (கோவை - 307). வண்ணம் - யாப்பமைதியின் உறுப்பு; ஆனாய நாயனார் புராணம் (953) பார்க்க. பார் ஆதரிக்க - உலகத்தோர் விரும்பி உய்யும்படி பொன் வண்ணத் திருவந்தாதி - “பொன்வண்ணம்Ó என்று தொடங்கும் முதற் குறிப்பாற் போந்த பெயர்; “ஆத்திசூடிÓ என்பதுபோல; அந்தாதி - திருப் பொன்வண்ணத் தந்தாதி என்க; “அடியுஞ் சீரு மசையு முடிவு முதலாச், செய்யுள் மொழியினஃ, தந்தாதித் தொடையென்றறைதல் வேண்டும்Ó; அந்தாதியின் வகை பல; அவற்றுள் இது செய்யுளந்தாதியாகும். அஃதாவது, நின்ற செய்யுளின் ஈற்றினின்ற எழுத்து, அசை, சீர், அடிகளுள் ஒன்று, வருஞ் செய்யுட்கு முதலாக வருவதாம். இது கலித்துறை அந்தாதி ; அந்தம் +ஆதி = அந்தாதி - வடமொழித் தீர்க்க சந்தி என்பர். 2-ம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய் நூலுக்குக் காரணக் குறியாயிற்று, முதற் செய்யுளின் முதலடி முதற் சீராகிய ஆதியும் ஈற்றடியின் ஈற்றுச் சீராகிய அந்தமும் மண்டலித்து அந்தம் ஆதியாயிருத்தலும் காண்க. “பொன்வண்ணம்Ó (1) என்று தொடங்கிப் “பொன்வண்ணமேÓ (100) என்று முடிகின்றது. வெண்பாவந்தாதியாய் இவ்வமைப்புடைய அற்புதத் திருவந்தாதியும் காண்க. அந்தாதி தமிழ்ப் பிரபந்த வகைகளும் ஒன்று. திருப்படி - திருக்களிற்றுப்படி; திருப்படிக் கீழ் (நின்று ) ஏத்தி - என்க; திருப்படிக்கீழ்ப் பணிந்தார் - என்றும் கூட்டி உரைக்க நின்றது. பருவமழை - கையார் - “பருவக் கொண்மூப் படியென....உதவிÓ என்ற திரு முகப் பாசுரக் கருத்தினை விரித்துரைத்தவாறு; பருவ மழை - வேண்டுங் காலத்தில் வேண்டிய அளவு தவிராது, பெய்யும் மழை; மழை வேண்டத்தக்கதே யாயினும், பருவமின்றி முன்பின்னாகப் பெய்தாற் பயனற்றதோடு கேடும் விளைவிக்கு மாதலின் பருவ மழை என்றார்; மழைக்கார் - மழை பெய்யும் மேகம்; மேகம் மழை பெய்யாது காட்டிய மட்டில் வந்து போதலு முளதாதலின், அதுபோலன்றி, மழை பெய்யுங் கார் என்றார். பருவம் - அளவும் குறித்தது. நிகர்க்க அரிய தன்மையாவது காலத்தாற் பெய்யினன்றிக் கேடு விளைக்கும் மழை போலல்லாது, இக்கொடை எக்காலத்தும் கேடுவிளைக்காமற் பயனே விளைக்கும் பண்பும், நீர் ஒன்றினையே தரும் மழைபோலல்லாது வேண்டின வெல்லா வற்றையும் வேண்டியவாறே தரும் நிலையும், பிறவும் ஆம். நிகர்க்க அரிய - என்றது படியென என்ற திருமுகப் பாசுரப் பகுதிக் குறிப்பினை விளக்கியவாறு; கொண்மூவும் இதனைப் படிஎடுத்தொழுகப் பழகும்படி என்றது அக்குறிப்பு. கழறிற்றறிவார் - இப்பெயர் குறிக்கும் தன்மை யெல்லாம் நினைவுகூர்தற் பொருட்டு ஈண்டு இப்பெயராற் கூறினார். 3761 - 3787 பார்க்க. உலக மோதியின்புறுதற்பொருட்டு இத்திருவந்தாதியினைத் தந்தருளிய கொடையின் சிறப்புக் குறிப்பு. |
|
|