பாடல் எண் :3804

தம்பி ரானார்க் கெதிர்நின்று தமிழ்ச்சொன் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடு மொருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினிலெடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட வெழுந்தவொலி தாமு மெதிரே கேட்பித்தார்.
57
(இ-ள்) தம்பிரானார்க்கு....கேட்பிக்க - தமது பெருமானாராம் கூத்தப்பெருமான் திருமுன்பு நின்று செந்தமிழின் சொன்மாலையாகிய திருவந்தாதியினைச் சேரலனார் கேட்பிக்க; உம்பர்.....பரிசிலென - தேவர்களும் வாழும்படி திருக்கூத்தாடுகின்ற ஒருவராகிய இறைவர் அப்பாட்டுக்கு ஏற்ற பரிசிலாக; செம்பொன்....ஒலி - செம்பொன்னாலாகிய அழகிய திருவம்பலத்தினில் எடுத்தருளிய செம்மை தருவதாகிய திருவடியின் திருச்சிலம்பினின்றும் இவ்வுலகத்தோர் வாழ எழுந்த ஒலியினை; தாமும்...கேட்பித்தார் - தாமும் அவர்க்கெதிரே கேட்கும்படி செய்தருளினர்.
(வி-ரை) தமிழ்ச் சொன்மாலை - ஒன்றையொன்று அந்தாதியாத் தொடரும்படி யாக்கப் பட்டமையின் திருவந்தாதியினை மாலை என்றார்.
கேட்பிக்க - கேட்கும்படி விண்ணப்பம் செய்ய. அதற்குப் பரிசிலெனத் - தாமும் ஒலி - கேட்பித்தார் - பாட்டுப்பாடி வரும் புலவோர்க்குப் பாடப்பட்டோர் பரிசில் தருதல் மரபு; அது போலச் சொன்மாலைக்கு ஒலி கேட்பித்தலே பரிசிலாக நின்றது என்பதாம். ஒலிக்கு ஒலியே பரிசிலாவ தெங்ஙனமோ எனின், இத்திருச் சிலம்பொலி எல்லாப் பேரானந்தங்களையும் விளைக்குமாதலின் ஏற்ற பரிசிலாம் என்பார் இம்பர் நீட எழுந்த ஒலி என்றார். எதிரே - பிரதியாக; தகுதியாக; நேராக.
கேட்பிக்கத் - தாமும் கேட்பித்தார் என இரண்டினையும் ஒப்பக் கூறுதல் காண்க; “ஆடிய நடனம் பாடிய பாட்டுக் கருளிய பரிசிலே யாமால்Ó (பள் - பட - 49) என்று பேரூர்ப் புராணத்தினுள் கச்சியப்ப முனிவர் இக்கருத்தினை நம்பிகள் தேவாரத்தினைக் குறித்து விரித்தல் காண்க.
உம்பர் - உம்பர்களும் வந்து வழிபட்டு உய்ய; உம்மை தொக்கது. இம்பர் - இவ்வுலகில் உள்ளோர்; நீடுதல் - பெருவாழ்வு பெறுதல்; “வெறிவிசும்பு வறிதாக, விம்ப ருய்ய வம்பலம் பொலியத், திருவளர் தில்லைமூதூ, ரருநடங் குயிற்று மாதிவா னவனேÓ (கோயினான் - 32), உம்பர் வாழ - அயன்மால் முதலாகிய தேவர்கள் வாழ்வடைதலாவது அவர்கள் செய்யும் படைப்பு முதலிய தொழில்கள் நன்கு நிகழ்தல். அவை நிகழ்வது இறைவரது ஐந்தொழிற் கூத்தினாலாவது என்பார் வாழநடமாடும் என்றார். ஒருவர் - ஐந்தொழில் செய்தல் இவர்க்கே உரியது என்பது.
எடுத்த செய்ய பாதம் - எடுத்த - தூக்கிய; குஞ்சித்த; செய்ய - செம்மை தருவதாகிய; செம்மையாவது முத்தி; “முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடுÓ (உண்மை விளக்கம்).
தாமும் - அவர் கேட்பித்தது போலத் தாமும் என உம்மை இறந்தது தழுவிற்று.