ஆடற் சிலம்பி னொலிகேட்பா ரளவி லின்ப வானந்தங் கூடப் பெற்ற பெரும்பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார் நீடப் பணியுங் கால மெலா நின்று தொழுது புறம்போந்து மாடத் திருமா ளிகைவீதி வணங்கிப் புறத்து வைகினார். | 58 | (இ-ள்) ஆடற்சிலம்பின் ஒலி கேட்பார் - முன்கூறியபடி இறைவர் ஆடும் சிலம்பின் ஒலியினைக் கேட்டவராகிய சேரலனார்; அளவில்...கும்பிடுவார் - அளவில்லாத இன்பமிக்க ஆனந்தம் சேரப் பெற்ற பெரும்பாக்கியத்தினது கொள்கை வாய்ப்பக் கும்பிடுவாராகி; நீட....புறம்போந்து - நெடிது பணியும் காலங்களெல்லாவற்றினும் நின்று பின்னர்ப் புறத்திலே போந்து; மாடத்திருமாளிகை....வைகினார் - மாடங்களையுடைய திருமாளிகை வீதியினை வணங்கிப்போய் அதன் புறத்திலே தங்கியருளினார். (வி-ரை) கேட்பார் - கும்பிடுவாராய்த் - தொழுது -வணங்கி - வைகினார் என்று முடிக்க. கேட்பார் - வினைப்பெயர். கொள்கை வாய்த்தலாவது கொள்ளப்பட்ட நிலைமை கைவருதல் பணியும் கால மெலாம் - வழிபாட்டுக்குரிய பூசாகாலங்க ளெல்லாவற்றினும். புறத்து - திருவீதியின் வெளிப்புறத்திலே. “அங்கண் அல்குந்திற மஞ்சுவார்Ó (2063) என்ற மனநிலையும், ஆண்டுரைத்தவையும் காண்க. |
|
|