பாடல் எண் :3806

பரவுந் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம்பொ னம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட வாடு வார்கூத் தாராமை
விரவுங் காதன் மிக்கோங்க வேதம் படியுந் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி யின்பஞ் சிறக்கு மந்நாளில்,
59
(இ-ள்) பரவும்....பயில்வார் - யாவர்களும் பரவுகின்றதில்லை வட்டத்தினுள்ளே தங்குவாராகிய சேரலனார்; பைம்பொன்......மிக்கோங்க - பசிய பொன்னாலாகிய திருவம்பலத்தினுள்ளே பாம்புக் கங்கையும் சடையினுள் தங்கி ஆடும்படி ஆடுகின்ற இறைவரது திருக்கூத்தினை ஆராமையினாலே பொருந்தும் பெருவிருப்பம் மிக்கு மேன்மேல் எழ; வேதம்....அந்நாளில் - வேதங்கள் போற்றிப் பணிகின்ற திருக்களிற்றுப்படியின் கீழே இரவும் பகலும் பணிந்து துதித்து அதனால் மிக்க இன்பம் சிறக்கப் பெற்றிருந்த அந்நாட்களில்,
(வி-ரை) பரவும் - எல்லாரும் பரவுகின்ற; எங்கும் பரந்துள்ள என்றலுமாம்; “எங்குஞ் சிதம்பரம்Ó (திருமந்); “எப்புவனங் களுநிறைந்த திருப்பதிÓ (1444) தாம் நாடோறும் வழிபட்டுத் துதிக்கின்ற என்றலுமாம்.
தில்லைவட்டம் - திருவீதிகளின் புறத்தே தில்லையின் எல்லைக்குட்பட்ட இடம், “தில்லை வட்டந்திசை கைதொழுவார்Ó (தேவா).
ஆராமை - நிறைவுபெறாத நிலைமையினாலே.
திருப்படிக்கீழ்க் கூத்துப் - பணிந்தேத்தி - என்று கூட்டுக. கூத்தினை - என இரண்டனுருபு விரித்துக் கொள்க.
வேதம் படியும் திருப்படி - பஞ்சாக்கரப்படி ; திருக்களிற்றுப்படி என வழங்குவது; முன் (251) உரைத்தவை பார்க்க; வேதங்கள் படிதலாவது துதித்தல், திருஐந்தெழுத்தே இப்படிகளாக அமைந்து இறைவர் திருவடிகளைத் தாங்கி நிற்பன என்பது. வேதங்கள் திருவைந் தெழுத்தாலே சிவனைத் துதிக்கின்றன என்பர்.
இரவும் பகலும் - இடையறாது; ஏத்தி - இன்பம் - சிறத்தல் - மிக்க இன்பத்துள் திளைத்தல்.
இன்புற்றிருக்கும் - என்பதும் பாடம்.