பாடல் எண் :3807

ஆடும் பெருமான் பாடல்கேட் டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசான் முன்பருளிச் செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாத ரருளினாற் றிருவா ரூர்மேற் செலவெழுந்தார்.
60
(இ-ள்) ஆடும் பெருமான்.... நாவலூர்க்கோவை - ஆடுகின்ற பெருமானாகிய இறைவர், “பாட்டினைக் கேட்டருளியபடியினாலே சிலம்பொலி கேட்பிக்கத் தாழ்த்தோம்Ó என்று தமக்கு அவரது நட்புக் கூடும் தன்மையினாலே முன்னாளில் அருளிச் செய்து நினைவூட்டிய திருநாவலூர் மன்னரை; நீடும்......நிரம்ப - நீண்டு செல்லும் பெருவிருப்பத்தினாலே காணவேண்டு மென்ற மனத்துள் நிறைந்த நினைவு மிகுதலினால்; மால்....எழுந்தார் - திருமால் தேடுகின்ற திருவடியினையுடைய இறைவரது திருவருள் பெற்றுத் திருவாரூரை நோக்கிச் செல்வதற்கு எழுந்தனர்.
(வி-ரை) ஆடும்...முன்பு அருளிச் செய்த - இவ்வரலாறு முன் (3791) உரைக்கப்பட்டது. கேட்டருளி - கேட்டருளியதனால் என்று காரணப் பொருளில் வந்தது.
அருளிச் செய்த - அருளிச் செய்ததற்குப் பொருளாய் நின்ற; கூடும்பரிசு - அவரது நட்பினைக் கூடும் தன்மை; “அவரை நினைப்பிப்பார்Ó (3791). ஏத்துதலால் - தமக்கு அருளிச் செய்த என்று கூட்டுக.
அருளினால் - அருள் விடைபெற்று.
திருவாரூர் மேற் செல - திருவாரூரை நோக்கிச் செல்ல; எழுதல் - பயணத்தை மேற்கொள்ளுதல்.