பாடல் எண் :3808

அறிவி னெல்லை யாயதிருத் தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப்
பிறிவி லாத திருவடியைப் பெருகு முள்ளத் தினிற்பெற்றுச்
செறியு ஞான போனகர்வந் தருளும் புகலி சென்றிறைஞ்சி
மறிசேர் கரத்தார் கோயில்பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்,
61
(இ-ள்) அறிவின்......இறைஞ்சி - ஞானமுடிபாகிய எல்லை எனப்படும் தில்லைத் திருவெல்லையினை விரும்பி வணங்கி; பிறிவிலாத...பெற்று - என்றும் பிறியாத திருவடியினை மேன்மேலும் அன்பு பெருகும் உள்ளத்தினில் வைத்து இருக்கப் பெற்று; செறியும்...இறைஞ்சி - நிறைந்த சிவஞானத்தை உண்டவராகிய ஆளுடைய பிள்ளையார் திருவவதரித் தருளுதற்கிடமாகிய சீகாழிப்பதியினைச் சென்று வணங்கி; மறிசேர்....மகிழ்ந்து - மானேந்திய கையினையுடைய இறைவரது கோயில்கள் பலவற்றையும் வணங்கி மகிழ்ந்து; வழிக்கொள்வார் - வழிச்செல்வாராகி,
(வி-ரை) அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை - அறிவின் எல்லை - ஞானங்களின் முடிபு இச்சிதம்பரம் என்ற பெயர்க்காரணம் பற்றியுணர்த்தியவாறு.“அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலேÓ (1220); “உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்" (1075) என்பன முதலியவை காண்க. எல்லை - எல்லை - சொல்லணி; எல்லை யிரண்டனுள் முந்தியது பதியின் சூக்கும நிறைவாகிய சிறப்பும், பிந்தியது பதியின் தூலமாகிய அளவு காணும் அமைப்பும் குறித்தன; இங்குக் குறித்தது இத் திருவெல்லை. (256)
பிறிவிலாத திருவடியை...பெற்று - தில்லையினின்றும் உடம்பாற் பிரியினும் மனத்துள் முன்னரும் எப்போதும் கொள்ளுதலாற் பிறிவிலாத திருவடி என்றார். உள்ளத்தினிற் பெறுதலாவது மனத்துள் அழுந்த நினைத்துக்கொண்டே - தியானித்து - இருத்தல்.
செறியும் ஞானம் - செறிதலாவது எல்லா ஞானங்களையும் தன்னுள் அடக்கிமேனிற்றல்; இது சிவஞானம். “சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்Ó “எண்ணரிய சிவஞானம்Ó: வந்தருளுதல் - அவதரித்தருளுதல். போனகம் - உணவு.
கோயில் பல - இவை சீகாழிக்கும் காவிரி வடகரைக்கும் இடையில் உள்ளவை; திருப்புள்ளிருக்கு வேளூர் - திருநின்றியூர் முதலாயின என்பது கருதப்படும்.
வழிக்கொள்வார் - வழியே புறப்பட்டுச் செல்வாராகி; வழிக்கொள்வாராகிக் - கடந்து ஏறி என மேற்பாட்டுடன் கூட்டுக. வழி - இவ்வழி சீகாழியினின்றும் தெற்கில் திருவாரூர் நோக்கி மாயவரம் வழியாய் செல்லும் சாலை என்பத கருதப்படும்.