வழியிற் குழியிற் செழுவயலின் மதகின் மலர்வா விகளின்மடுச் சுழியிற் றரளந் திரைசொரியுந் துறைநீர்ப் பொன்னி கடந்தேறி விழியிற் றிகழுந் திருநுதலார் விரும்பு மிடங்க ளிறைஞ்சியுகக் கழிவிற் பெருவெள் ளமுங் கொள்ளாக் கழனி யாரூர் கண்ணுற்றார். | 62 | (இ-ள்) வழியில்.....கடந்தேறி - வழியிலும், குழியிலும், செழுவிய வயல்களிலும், மலர்களையுடைய வாவிகளிலும் மடுக்களின் சுழியிலும் முத்துக்களை அலைகள் சொரிகின்ற துறையினையுடைய நீர் நிரம்பிய காவிரியினைக் கடந்து தென்கரையினை ஏறி; விழியில்........இறைஞ்சி - கண்ணுடன் கூடிய திருநெற்றியினையுடைய இறைவர் விரும்பி எழுந்தருளியுள்ள பதிகளை வணங்கிச் சென்று; யுகக்கடையில்.....கண்ணுற்றார் - நீர் ஊழி முடிவில் வரும் பெரிய வெள்ளத்தாலும் கொள்ளப்படாத அழிவின்றியுள்ள வயல்கள் சூழ்ந்த திருவாரூரினைக் கண்ணுற்றனர். (வி-ரை) வழியில்....துறை நீர்ப்பொன்னி - வழியிலும் குழியிலும் மதகிலும் வாவிகளிலும் மடுச்சுழியிலும் திரை தரளம் சொரியும் நீர்த்துறை என்க. உம்மைகள் விரிக்க; வழி - வரும் வழி: குழி - நீர் தங்கும் குழிகள்; பள்ளங்கள்; மடுச்சுழி - மடுக்களில் நீர் ஓடுவதனால் உண்டாகும் நீர்ச்சுழிகள்; தரளம் - முத்துக்கள். இவை, மலைமேலிருந்து காவிரி அலைத்து வருவனவும், வழியில் மூங்கில்கள் இப்பிகள் கரும்பு நெல் முதலியவற்றின் விளைந்து சார்வனவுமாம். விரும்பும் இடங்கள் - இவை சீகாழிக்குத் தெற்கில் காவிரி கடந்தேறிய துறைக்கும் திருவாரூருக்கும் இடைப்பட்ட பதிகள்; திருவழுவூர் வீரட்டம், திருமீயச்சூர், மீயச்சூரிளங்கோயில், திருத் திலதைப் பதிமுற்றம், திருவம்பர் மாகாளம், திருவிற்குடி முதலியவை என்பது கருதப்படும். யுகக் கழிவில் பெருவெள்ளமுங் கொள்ளா - யுகக் கழிவு - கற்பாந்தம்; நீரூழி; பெருவெள்ளம் - வெள்ளமுங் கொள்ளா - நீர் பிரளயமும் பெருகித் திருவாரூரினை ஆழ்த்திவிடாதபடி காத்த இறைவர் பரவையுள்மண்டளி யம்மானார் என்பது வரலாறு: பரவை உண் - என்ற பெயரும் காண்க. தல விசேடம் பார்க்க. |
|
|