பாடல் எண் :3810

நம்பி தாமு மந்நாட் போய் நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூ ணவமணிக ளாடை சாந்த மடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று மற்றும் பலபதியிற்
றம்பி ரானைப் பணிந்தேத்தித் திருவா ரூரிற் சேர்ந்திருந்தார்.
63
(இ-ள்) நம்பி தாமும்.... - நம்பிகளும் அந்நாள்களினிடையே திரு நாகைக்காரோணத்திற் சென்று திருப்பதிகம்பாடி, அழகிய பொன்னாலும் மணிகளாலுமியன்ற அணிவகைகளையும் நவமணிகளையும், ஆடை, சாந்து, வலிமையுடைய குதிரைகள், பசிய பொன்னாலான சுரிகை முதலானவற்றையும் இறைவர் தரப்பெற்று; மற்றும்....ஏத்தி - மேலும் பல பதிகளிலே இறைவரைப் பணிந்து துதித்து; திருவாரூரிற் சார்ந்திருந்தார் - மீண்டு திருவாரூரில் சேர்ந்து எழுந்தருளி யிருந்தனர்.
(வி-ரை) இப்பாட்டினால் நம்பிகள் ஏயர்கோன் கலிக்காமனாரது கூட்டத்தினைத் திருவருளாலே பெற்று இருவரும் திருவாரூரில் ஒருங்கிருந்து இறைவரை வணங்கியிருந்த பின் (3561), இங்குக் கழறிற்றறிவார் நாயனாரைச் சந்திக்கின்ற வரை உள்ள நம்பிகளது சரித வரலாற்றைச் சுருக்கிக் கூறி முடித்தவாறு; இந்த இரண்டு நாயன்மார் புராணங்களுடன் ஒருங்கே விரவி நம்பிகளது சரிதமும் நிறைவாகத் தொடர்ந்து கூறப்பட்டுவருதலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகை யமைப்பினுள் திருவருளால் வைக்கப்பட்டுள்ள தெய்விக நிலையும் கண்டுகொள்க.
நம்பி தாமும் - “திருமுனைப்பாடி நாடர், மலர்புகழ்த் திருவாரூரின் மகிழ்ந்துடன் வந்த வேயர், குலமுதற் றலைவ னாருங் கூடவே குளிர்பூங் கோயில், நிலவினார் தம்மைக் கும்பிட் டுறைந்தனர்Ó (3561) என்று முன்னர்க் கூறிய அந்த - என்று உம்மை இறந்தது தழுவியது.
அந்நாட்போய் - ஏயர்கோனாயனார் தமது பதியில் விடைபெற்று மீண்ட பின்னரும், இங்குக் கழறிற்றறிவார் வருதற்கு முன்னருமாகிய முன்னாளிலே சென்று,
நாகைக் காரோணம்பாடி......பெற்று - இக்கருத்துப் பதிக ஆதரவு பெற்றன என்பது கருதப்படும்.
மணிப்பூண் - நவமணிகள் - மணிகளிழைத்த பூண் வருக்கமே யன்றி வேறாக நவமணிகளையும் என்க. இவை வேறாகச் சிவபூசையிற் பயன்படுதற் குறிப்பாம்.
மற்றும் பல பதி - இவை திருநாகைக்காரோணத்துக்கும் திருவாரூருக்கும் இடையிட்டவையும், அணிமையிலுள்ளவையும் ஆம் என்பதும், இவை திருக்கீழ்வேளூர், திருச்சிக்கல் முதலாயின என்பதும் கருதப்படும்.
குறிப்பு - இப்பாட்டுச் சில பிரதிகளில் இல்லை. பின்னர்க் கழறிற்றறிவார் நாயனாருடன் போந்து “திருநாகைக்காரோணம் பணிந்து, சிந்தையினை யுருக்கார்வச்செந்தமிழ்மாலை சாத்திச் சில நாளுறைந்துÓ (3832) என்று இத்திருப்பதிகச் சிறப்புடன் கூட்டிக் கூறப்படுகிறது. இக்கருத்துக்கள் ஆராய்தற்குரியன.
முன்னாட்போய் - என்பதும் பாடம்.