பாடல் எண் :3811

வந்து சேரர் பெருமானார் மன்னுந் திருவா ரூரெய்த,
அந்த ணாளர் பெருமானு மரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ வெதிர்கொண்டு சென்று கிடைத்தார்; சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்பு விருப்பி னுடன்றாழ்ந்தார்.
64
(இ-ள்) வந்து - எய்த - சேரமான் பெருமாளும் வந்து நிலைபெற்ற திருவாரூரினைச் சார; அந்தணாளர் பெருமானும்.....கிடைத்தார் - அந்தணர்களின் தலைவராகிய நம்பிகளும் அரசர் தலைவர் வரும்பேறுபெற்று மனம்மிக மகிழ எதிர்கொண்டு போய் அவரை அணுகினார்; சேரலனார்..... தாழ்ந்தார் - சேரமான் பெருமாளும் அழகிய மணமுடைய மாலை யணிந்த வன்றொண்டரின் முன்பு விருப்பத்துடனே தாழ்ந்து வணங்கினர்.
(வி-ரை) அந்தணாளர் பெருமானும் அரசர்பெருமான் வரப்பெற்று - “சேரமான் றோழர்Ó என்று நம்பிகளுக்கு நாமம் வழங்கப் பெறுதற்கு உரிமை (3813) இருவரும் ஒப்பாந் தன்மை யுடைமையே என்பார் இருவரையும் பெருமான் என்றார். மேலும் “வேந்தர்" (3813) என்பதும் காண்க. வரப்பெற்று - வரும் பேறு பெற்று.
சென்று கிடைந்தார் - போய்க் கிட்டினார்; கிடைத்தல் - சார்தல்.
தாழ்ந்தார் - வீழ்ந்து வணங்கினார்; நிலமுறக் கீழ் வீழ்ந்தமை மேல்வரும் பாட்டில் “முகந்தெடுத்தேÓ (3812) என்பதனாற் பெறப்படும்.
வன்றொண்டர் - இப்பெயரினாலே இறைவர் நினைப்பித்தமையால் (3791) அதனையே எண்ணத்தில் நிலவக்கொண்டு. “வன்றொண்டர் தமையும் காண்பன்Ó (3792) என்றெழுந்துபோந்த சேரலனார் அந் நினைவோடே தாழ்ந்து வணங்கினர் என்ற குறிப்பும் பெற ஈண்டு வன்றொண்டர் என்ற அப்பெயராற் கூறினார்.