பாடல் எண் :3812

முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந் தவரு மார்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி யேற மாட்டா தலைவார்போல்
என்பு முருக வுயிரொன்றி யுடம்பு மொன்றா மெனவிசைந்தார்.
65
(இ-ள்) முன்பு.....தழுவ - தம் முன்னர் வீழ்ந்து பணிந்து சேரமான் பெருமாணாயனாரை நம்பிகள் தாமும் பணிந்து அவரை அணைத்து மேல் எடுத்தே அன்பு பெருகுதலினாற் றழுவிக் கொள்ள; விரைந்து...தழுவ - அவரும் மிக்க அன்புடனே தழுவ; இன்ப வெள்ளத்திடை.......போல் - இன்பமாகிய வெள்ளத்தின் மூழ்கிக் கரையேற மாட்டாது அலைபவர்கள் போல்; என்பும்.....இசைந்தார் - எலும்பும் உள்ளுருக உயிர்களும் ஒன்றாக உள்ளே கலக்க, அதுபோலப் புறத்தும் இரண்டு உடம்புகளும் ஒன்றாயின என்னும்படி பொருந்தினர்.
(வி-ரை) முகந்தெடுத்து - குனிந்து கைகளை அணைத்துத் தூக்கி மேல் எடுத்து.
இன்ப வெள்ளத்திடை மூழ்கி - இன்பப் பெருக்கினை நீர்ப் பெருக்கென உருவகித்தார்.
ஏறமாட்டா தலைவார்போல் - இசைந்தார் - என்று கூட்டுக; ஏறுதல் - கரை ஏறுதல்; எல்லை காணுதல்; அலைவார்போல் - இருவரும் தழுவிக்கொண்டு விடாத நிலையில் அழுந்துதல் இவ்வாறுபசரிக்கப்பட்டது.
உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாமென - உயிர் ஒன்றுதல் உணர்ச்சி வகையாற் கட்புலப்படா நிலைமையில் நிகழ்வது; உடம்பும் ஒன்றாம் என - இது கட்புலப்பட நிகழ்வது; உடம்புகள் ஒன்றாதல் கூடாமையின் அவ்வாறுள்ள இருவேறு உடம்புகளும் என்று உம்மை சிறப்பும்மை. உயிர் ஒன்றாதலே யன்றி உடம்பும் என்று இறந்தது தழுவியதுமாம். சிறப்புப் பற்றி உயிர் ஒன்றாதல் முன் வைக்கப்பட்ட. இசைதல் - கூடுதல், சேர்தல், தழுவியமையால் உடம்புகள் ஒன்றாயின போன்றன என்பது.
இசைந்தார் - பிரிக்கலாகாது பொருந்தினார் என்ற குறிப்பினால் இவ்விரு பெருமக்களும் இவ்வுடம்புகளுடனே தமது உயிர் நாயகராகிய இறைவர்பால் திருக்கயிலையிலும் உடனாச் சென்று சேர்ந்த பிற்சரிதக் குறிப்பும் பெறப் படுதல் காண்க.
என்பு முருகி - என்பதும் பாடம்.