பாடல் எண் :3813

ஆன நிலைமை கண்டதிருத் தொண்ட ரளவின் மகிழ்வெய்த
மானத் தோழர் பெருமானார் தாமும் வன்றொண் டருங்கலந்த
பான்மை நண்பாற் “சேரமான் றோழÓ ரென்று பார்பரவும்
மேன்மை நாம முனைப்பாடி வேந்தர்க் காகி விளங்கியதால்,
66
(இ-ள்) ஆன...எய்த - முன்கூறியவா றாயின தன்மையினைக் கண்ட திருத்தொண்டர்கள் அளவில்லாத மகிழ்ச்சியினை அடைய; மான.....நண்பால் - பெருமை யுடைய தோழர் பெருமானாகிய சேரனாரும் வன்றொண்டராகிய நம்பிகளும் ஒருவரொருவருட் கலந்த பான்மையினாற் போந்த நண்பு காரணமாக; சேரமான்றோழர்.....விளங்கியதால் - சேரமான் தோழர் என்னும் உலகுபுகழும் மேன்மை பொருந்திய திருநாமம் முனைப்பாடி நாட்டின் வேந்தராகிய நம்பிகளுக்கு உலகில் விளங்க வழங்கலாயிற்று.
(வி-ரை) தோழர் பெருமானார் - சேரனார். ஒத்த அன்பினால் தழுவிக் கொண்டு பேணுதல் தோழமைக்கே உரியதாதலின் தோழர் என்றார், மானம் - பெருமை.
வன்றொண்டர் - (3811) முன்னும் “வன்றொண்டர்Ó என்ற குறிப்பும் ஈண்டுக் கருதுக.
கலந்த பான்மை நண்பால் - பான்மையாவது தெய்வங் கூட்ட வரும் ஊழால் வருவது. இங்கு “அவரை நினைப்பிப்பார்Ó (3791) என்று இறைவர் தாமே காட்டுவித்ததனால் இந் நட்பு விளைந்தமை காண்க. நண்பால் - நண்பு காரணமாக; கலந்த - மேல், “ஒருவ ரொருவ ரிற்கலந்த வுணர்வுÓ (3814) என்பது காண்க
சேரமான்றோழர்......ஆகி விளங்கியதால் - இப் பெயர் இத்தமிழ்நாட்டில் வழங்கக் காண்பதரிதாயிற்று; ஆயினும் ஆசிரியரது மெய்த்திருவாக்கின் பயனாக இன்னும் சேரநாட்டில் திருவஞ்சைக் களத்தில் மலையாளர் வழங்கக் காண்கின்றோம். ஒக்க ஓராதனத்தில் வீற்றிருக்கும் இவ் விருவருள்ளும் “ஈ - ஆள்தோழராணÓ என்று அவர்கள் நம்பிகளைச் சுட்டிக் கூறுவதைக் கேட்டபோது அடியேனுக்குண்டாகிய ஆனந்தத்துக் களவில்லை.
மேன்மை நாமம் - இறைவர் “தோழமையாக வுனக்கு நம்மைத் தந்தனம்Ó (273) என்றது கொண்டு முன்னர்த் “தம்பிரான் றோழர்Ó என்ற நாமத்தினை வழங்கினர்; இன்று நம்பிகளும் சேரனாரும் ஒத்த நட்புரிமையினாற் றழுவிக் கொண்டமை கண்டு “சேரமான் றோழர்Ó என்று இப் பெயர் விளங்க வழங்கப் பெற்றது. அதனினும் இது மேன்மையுடையது; திருவருட் பான்மையினால் நிகழ்ந்ததாதலின்; என்பதாம். ஆண்டவன் கலப்பினும் அடியார் கலப்பு மிக்க மேன்மையான ஆனந்தானுபவம் தருவதாம் என்பதும் குறிப்பு ; சிவப்பேறு கூறி முடித்த பதினொராம் சூத்திரத்தின் மேல் வரும் 12-ம் சூத்திரத்தில் “அன்பரொடுமரீஇÓ என்று அடியார் கலப்பினை விதந்து பேசப்படும் நிலையும் காண்க.
ஆகி - ஆகப்பெற்று; ஆக்கச் சொல் இக் காரணம் பற்றி என்று குறித்தது. “நல்ல தோழர் நம்பெருமா டமக்கு நம்பி யிவரென்பார்Ó (3895).
விளங்கியதால் - மேம்பாடு குறித்தது. விளக்கம் பெற வழங்குவதாயிற்று; ஆல் - அசை.