பாடல் எண் :3814

ஒருவ ரொருவ ரிற்கலந்த வுணர்வா லின்ப மொழியுரைத்து
“மருவ வினியார் பாற்செய்வ தென்னா?Ó மென்று மகிழ்ச்சியினாற்
பருவ மழைச்செங் கைப்பற்றிக் கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுட் புகுந்தார் சேர மான்றோழர்.
67
(இ-ள்) ஒருவர்......உரைத்து - ஒருவருள் ஒருவர் கூடிய உணர்ச்சியினாலே இன்பம் தரும் மகிழ்ச்சி மொழிகளைச் சொல்லிக்கொண்டு; மருவ....மகிழ்ச்சியினால் - பொருந்திப் பயிலுந்தோறும் இனிமை தருவாராகி இருவரையும் கூட்டி வைத்த இறைவர்பால் மேல் நாம் செய்யக்கடவதாகிய கைமாறு என்னே என்று மனத்துள் எழுந்த மகிழ்ச்சியினாலே; சேரமான் தோழர் - சேரமான் தோழராகிய நம்பிகள்; பருவமழைச் செங்கை....புகுந்தார் - சேரமானாரது பருவகால மழை போன்ற கொடைபயிலும் செங்கையினைப் பற்றிக்கொண்டு இறைவரது திருவடிகளைப் பணிவதற்கு எண்ணித் திருவீதியினை நீங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்தருளினர்.
(வி-ரை) ஒருவர்.......உணர்வாவது - இவரது உணர்ச்சியினுள்ளே அவரது உணர்ச்சியும், அவ்வாறே, அவரது உணர்ச்சியுள் இவரது உணர்ச்சியுமாகக் கலத்தல். இன்பமொழி - தெய்வத்திருவருள் நலங்களாகிய இன்பமொழிகளை ஒருவர்பால் ஒருவர் கூறிக் கொள்ளுதல். மருவ இனியார் ....என்னாம்! - மருவ இனியார் - பயிலுந்தோறும் புதிது புதிதாக இன்பந்தரும் இறைவர் இங்கு, இருவரையும் நினைவுபடுத்தியும் கூட்டி வைத்தும் அருளி அன்பர் கூட்டத்தினால் வரும் பெரிய இன்பத்தை உளதாக்கிய அருள்பற்றி இவ்வாறு கூறினார். செய்வது - செய்யும் கைமாறு; நாம் செய்வது என் என்று கூட்டுக. என் - நாம் - என்க. தெய்வத்தை மகிழ்தல் என்ற அகப்பொருட்டுறைக் கருத்து; (கோவை - 6 பார்க்க); அவரை வணங்குதலன்றி வேறென் செய்ய வல்லோம் என்பார்போலக் “கோயிலினுட் புகுந்தார்Ó என்றார்.
இங்கு, இவ்வாறன்றி, இன்பமொழி உரைத்து - மருவி என்று கூட்டி, மருவ என்பதற்கு மருவியவழி என்றுரைத்தும், இனியார்பாற் செய்வது என்னாம் - இனியவராகிய சேரமானாரிடத்து இனிச் செய்யக் கடவது இறைவரைச் சென்று வணங்குவதன்றி வேறுயாதுளது என்றுரைத்தும், உரைகண்டனர் முன் உரைகாரர்கள், இவற்றின் பொருத்தங்கள் ஆராயத்தக்கன.
பருவ மழைச் செங்கை - “காரா னிகர்க்க வரியகொடைக் கையார்Ó (3803) என்ற கருத்து; ஆண்டுரைத்தவை பார்க்க; “பருவக் கொண்மூப் படிÓ என்ற திருமுகப் பாசுரத்தின் ஆட்சி போற்றப் பட்டது. கைப்பற்றிச் செல்லுதல் நட்புரிமையின் செயல். மழைச் செங்கை - மழைபோலக் கொடை பயிலும் கை என்க.
சேரமான் தோழர் - அடியார்கள் இந் நாமத்தினை விளங்க வழங்கலாயினர் என முன்பாட்டில் வரலாறு கூறினாராதலின், அதன்படி, ஆசிரியர் தாமே அடுத்து இப்பாட்டில் அந் நாமத்தை விளங்க வழங்கலாயின கவிநயம் காண்க.
கோயிலினுட் புகுந்தார் - நம்பிகள் வந்து எதிர்கொண்டு கிடைத்த இடத்தினின்றும் நேரே திருக்கோயிலினுட் சென்று புக்கனர் என்க. அன்பரொடுகூடி இறைவரை வணங்கப் பெறுதல் பேரின்பந் தருவதாம்.