சென்று தேவா சிரியனைமுன் னிறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண் டொன்று முள்ளத் தொடும்புகுவா ருடைய நம்பி முன்னாக நின்று தொழுது கண்ணருவி வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே என்று மினிய தம்பெருமான் பாத மிறைஞ்சி யேத்தினார். | 68 | (இ-ள்) சென்று....புகுவார் - முன்கூறியவாறு நம்பிகள் தமது கையினைப் பற்றி அழைத்துச் செல்லச் சென்று திருமுன்றிலில் முதற்கண் உள்ள திருத்தேவாசிரியனை முதலில் தொழுது, பின், இறைவரது திருமாளிகையினை வலமாகச் சுற்றி வந்து ஒன்றுபட்ட மனத்தோடும் உட்புகுவோராகிய சேரமான் பெருமாணாயனார்; உடைய நம்பி முன்னாக - ஆளுடைய நம்பிகள் முன்னே நின்று வழிபட; நின்று - தாம் அவர் பின்னே நின்று; தொழுது ...வீழ்ந்தே - வணங்கிக் கண்ணீர் அருவிபோல வீழத் தாம் நிலத்தின்மேல் விழுந்தே; என்றும்.....ஏத்தினார் - என்றும் இனிய தமது பெருமானாராகிய புற்றிடங்கொண்ட பெருமானாரது திருவடிகளை வணங்கித் துதித்தருளினர். (வி-ரை) முன்பாட்டிற் கூறியது நம்பிகளது செயல்; இப்பாட்டினால் அவ்வாறு செய்யப்பட்ட சேரனாரது செயல் கூறப்பட்டது. உடன் சென்ற நம்பிகளும் இறைவரை வணங்கினாரேனும் புராணவரலாறு சேரலனாரைப்பற்றியதாதலின் அவர் வழிபட்ட செயலே விரித்துத் கூறப்பட்டது கவிநயம். சென்று....புகுவார் - வழிபடும் முறை; புகுவார் - திருக்கோயிலினுட் புகுவாராகிய சேரலனார்; புகுவார் - தொழுது - வீழ்ந்தே - இறைஞ்சி - ஏத்தினார் என்க. புகுவார் - வினையாலணையும் பெயர். ஒன்றும் உள்ளம் - இறைவன் றிருவடிகளில் ஒன்றுபட்ட மனம்; ஒன்றுதல் பிரிவின்றிப் பொருந்துதல். “ஒன்றியிருந்து நினைமின்கள்Ó (தேவா. - அரசு). முன்னாக - முன் நின்று வழிபட; நின்று - தாம் அவர் பின்னே நின்று. என்றும் இனிய - பெத்த முத்தியிரண்டு நிலையிலும் எக்காலத்திலும் இனிமையே செய்யும்; தம்பெருமான் - புற்றிடங்கொண்ட பெருமானார். ஏத்தினார் - துதித்தார்; திரு மும்மணிக்கோவை பாடிக் கேட்பித்தல் வேறு; அது மேற்பாட்டிற் கூறப்படும். |
|
|