தேவர் முனிவர் வந்திறைஞ்சுந் தெய்வப் பெருமாள் கழல்வணங்கி மூவர் தமக்கு முதலாகு மவரைத் திருமும் மணிக்கோவை நாவ லூரர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார் தாவில் பெருமைச் சேரலனார்; தம்பி ரானார் தாங்கொண்டார். | 69 | (இ-ள்) தேவர்..வணங்கி - தேவர்களும் முனிவர்களும் வந்து இறைஞ்சுகின்ற தெய்வப் பெருமாளாகிய தியாகேசரது திருவடிகளை வணங்கி; தாவில் பெருமைச் சேரலனார் - கெடுதலில்லாத பெருமையினையுடைய சேரமான் பெருமாணாயனார்; மூவர்......அவரை - மூவர்க்கும் முதல்வராகும் அவ்விறைவரை; நாவலூரர் தம்முன்பு - திருநாவலூர் நம்பிகளது திருமுன்பு வைத்து; திருமும்மணிக் கோவை நன்மை விளங்கக் கேட்பித்தார் - திருமும்மணிக்கோவை பாடி நன்மை விளங்கும்படி கேட்பித்தனர்; தம்பிரானார் தாம் கொண்டார் - அதனைத் தமது பெருமானாரும் ஏற்றுக்கொண் டருள்புரிந்தனர். (வி-ரை) தெய்வப் பெருமாள் - வீதிவிடங்கராகிய தியாகேசர். மூவர் தமக்கு....திருமும்மணிக்கோவை - மூவர் - அயன் - அரி -அரன்; (பிரமன் - விட்டுணு - உருத்திரன் என்பர்); இவர்களுக்கு முதலாதல் அவர்களுடையடைய தொழில்களுக் கெல்லாம் காரணராக இருந்து தாமே இயக்குதல்; “அரியாகிப் காப்பா னயனாய்ப் படைப்பா, னரனா யழிப்பவனுந் தானேÓ (ஞானவுலா); பிள்ளையாரது (பண் - நட்டபாடை) திருச்சிவபுரத் தேவாரம் 1-2-3 பாட்டுக்கள் பார்க்க. மும்மணிகள் - வெவ்வேறாகிய மூன்று மணிகள்; கோவை - கோக்கப்பட்ட மாலை; இங்கு மும்மணிகள் என்பது ஆசிரியப்பா - வெண்பா - கலித்துறை என்பன; மணிகள் மூவகைப் படினும் ஒரே நாணிற் கோக்கப்பட்டு ஒரு மாலையாதல் போல இங்கு மூவர்க்கும் முதல்வராகிய ஒருவர் இப் பாட்டுக்களினுட் பொருள் என்பதாம். முன்பு - திருமுன்னர்; நன்மை விளங்க - உலகம் ஓதிப் பயன்பெற்று நல மடைந்து விளங்க. அவரைக் - கேட்பித்தார் என்று கூட்டுக; கேட்பித்தலாவது திருச்செவி மடுக்க விண்ணப்பித்தல் தாவில் - சிதைவில்லாத; கெடாத. ஒப்பற்ற என்றலுமாம். கொண்டார் - ஏற்றருளிச் செய்தனர். |
|
|