பாடல் எண் :3817

அங்க ணருள்பெற் றெழுவாரைக் கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா ளிகையி னண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கு நிறைகுடமும் பூமா லைகளும் புகையகிலும்
எங்கு மடவா ரெடுத்தேந்த வணைந்து தாமு மெதிர்கொண்டார்.
70
(இ-ள்) அங்கண்...நண்ண - அவ்விடத்து இறைவரது திருவருளைப் பெற்று எழுந்த கழறிற்றறிவாரை உடன்கொண்டு புறம் போந்து நம்பியாரூரர், நங்கைபாவையாரது திருமாளிகையின் கண்ணே பொருந்த; நன்னுதலார்....ஏந்த - ஒளி மிகும் விளக்குக்களையும் நிறைகுடங்களையும் பூமாலைகளையும் எங்கும் பெண்கள் ஏந்திவர; அணைந்து தாமும் எதிர்கொண்டார் - மாளிகையின் திருவாயிலின் வந்து தாமும் எதிர் வரவேற்றனர்.
(வி-ரை) அங்கண் அருள் பெற்று - திருமும்மணிக் கோவையினை இறைவரைக் கேட்பித்து அவரும் ஏற்றருள, அவ்வருளினை அவ்விடத்தே அப்பொழுதே பெற்று; அங்கண்மையுடைய திருஅருளினை என்றலுமாம்.
நங்கை பரவையார் - நங்கை - பெண்களுட் சிறந்தோரைக் கூறும் மரபுப் பெயர்.
திருமாளிகையில் நண்ண - நம்பிகள் சென்று எதிர்கொண்ட இடத்தினின்றும் திருவீதி கடந்து நேரே திருக்கோயிலில் இருவரும் சேர்ந்தார்களாதலின் அங்கு நின்றும் திருமாளிகைக்கு வந்து என்க.
பொங்கு ஏந்த - விளக்கு, நிறைகுடம், பூமாலை, நறும்புகை முதலிய மங்கலப் பொருள்களை நிரைத்து ஏந்திப் பெரியோர்களை வரவேற்றல் மரபு; இவ்வழக்கம் இன்றும் சேரநாட்டினும் ஈழநாட்டினும் நிகழக் காணலாம். நமது தென் தமிழ்நாடு இதனை மறந்தொழிந்தது!
மடவார் - விளக்கு முதலியவற்றை மங்கலப் பெண்கள் ஏந்துதல் மரபு; இவ் வழக்கும் சேரநாட்டில் இன்றும் காணப்பெறுவதாம்.
தாமும் எதிர்கொண்டார் - முன்னர் நம்பிகள் புறஞ்சென்று எதிர்கொண்டமை போலத் தாமும் திருமாளிகைத் திருவாயிலில் என்று உம்மை இறந்தது தழுவியது; மனைக்குரிமையுடைய அம்மையார் வருவிருந் தெதிர்கோடல் மனையறத்தின் பெருங் கடமைகளுள் ஒன்று, “மனைக், கடனுடைய திருவெண்காட் டம்மைகடைத் தலை யெய்திÓ (3697); “திருமனையில் மனைவி யார்தா மாதவரை, முந்த வெதிர்கொண்டடிவணங்கி, முழுது மழகு செய்தமனைச் சந்த மலர்மா லைகள் முத்தின் றாம நாற்றிÓ (3729) என்பன முதலாக வந்தவை காண்க.